ADDED : ஆக 21, 2026 06:50 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பார்த்தீனியம் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
நாடு முழுவதும், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் கீழ் களை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் சார்பில் கடந்த 16 முதல் 22ம் தேதி வரை பார்த்தீனிய விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டது.
அதன்படி, விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் பரவளூர் கிராமத்தில் பார்த்தீனியம் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பார்த்தீனியத்தை கட்டுப்படுத்த கிளைபோசேட் தெளித்தல் குறித்து செயல்விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது.
பார்த்தீனியம் அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் ஊடுருவிய ஒரு நச்சுக்களை. மனிதர்களுக்கு ஆஸ்துமா, சொரியாசிஸ் போன்ற நோய்களையும், கால்நடைகளுக்கு கருச்சிதைவு போன்ற தீங்கு ஏற்படுகிறது. அதிக விதை உற்பத்தியால், எளிதில் பரவக்கூடும்.
இதனை அழிப்பது அவசியம். நுாறு செடிகள் வரை பிடுங்கி வீசலாம். ஆனால், அதிகளவு செடிகள் இருந்தால், 24-D சோடியம் பாராக்குவாரட், கிளைபோசேட் மற்றும் கல்லுப்பு கரைசல் கொண்டு எளிதில் கட்டுப்படுத்த முடியும் என விவசாயிகள், பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேபோல், மணவாளநல்லுார், கோமங்கலம், பூலாம்பாடி, காவனுார் கிராமங்களிலும், புதுக்கூரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அறிவியல் நிலைய பேராசிரியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் பங்கேற்றனர்.
