ADDED : ஆக 22, 2026 04:50 PM
அ நிறம் | அளவு
திட்டக்குடி, ஆக. 23–
திட்டக்குடியில் இருந்து ஆவினங்குடி வழியாக நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டக்குடி அடுத்த நெய்வாசலில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராமத்திற்கு பல ஆண்டுகளாக பஸ் வசதி இல்லாததால், இக்கிராம மக்கள் 4 கி.மீ., துாரமுள்ள ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அல்லது 6 கி.மீ., துாரமுள்ள கொடிகளம் பஸ் நிறுத்தம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டியுள்ளது.
பஸ் இயக்க வேண்டும் என கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் பெண்கள், சிறுவர்கள், முதியோர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.
எனவே, நெய்வாசலுக்கு அரசு டவுன் பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
