/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஜமாபந்தி சம்பிரதாயமாக மாறியதால் மக்கள் அதிருப்தி: திட்டக்குடியில் அதிகாரிகள் மீது நம்பிக்கை இழப்பு
/
ஜமாபந்தி சம்பிரதாயமாக மாறியதால் மக்கள் அதிருப்தி: திட்டக்குடியில் அதிகாரிகள் மீது நம்பிக்கை இழப்பு
ஜமாபந்தி சம்பிரதாயமாக மாறியதால் மக்கள் அதிருப்தி: திட்டக்குடியில் அதிகாரிகள் மீது நம்பிக்கை இழப்பு
ஜமாபந்தி சம்பிரதாயமாக மாறியதால் மக்கள் அதிருப்தி: திட்டக்குடியில் அதிகாரிகள் மீது நம்பிக்கை இழப்பு
ADDED : ஜூன் 27, 2024 03:06 AM
திட்டக்குடி: திட்டக்குடி தாலுகா அலுவலகத்தில் நடக்கும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி)சம்பிரதாய நிகழ்வாக மாறிப்போனதால், நம்பிக்கை இழந்த பொதுமக்கள் மனு கொடுக்கஆர்வம் காட்டாமல் அதிருப்தியில் உள்ளனர்.
ஆண்டுதோறும் வருவாய்த்துறை சார்பில், தாலுகா வாரியாக ஜமாபந்தி எனப்படும் வருவாய் தீர்வாயம் நடத்தப்படுகிறது. இதில் ஜமாபந்தி அலுவலர், தாசில்தார், வருவாய் ஆய்வாளர், வி.ஏ.ஓ.,உட்பட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்பர். துறை அதிகாரிகள் அனைவரும் இருப்பதால், பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.
பிற அலுவல் நாட்களில் அதிகாரிகள் பல்வேறு பணிகள் மூழ்கி இருப்பதால், ஜமாபந்தி நாட்களில் பொதுமக்கள் பணிகள் மட்டுமே முதன்மைப்பணி. ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு கையூட்டு தொல்லை இருக்காது, அதிகாரிகள் நேரடி ஆய்வால் பொதுமக்களுக்கு நேர, பண விரயங்கள் இன்றி மனுக்கள் மீது தீர்வு கிடைக்கும் என நம்பி வந்தனர்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே, ஜமாபந்தி சம்பிரதாய நிகழ்வாகிப் போனதால் இந்த ஆண்டு மனுக்கள் கொடுப்பதில் பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை.
மனுக்களின் எண்ணிக்கை குறைந்து போனதற்கு, கடந்த ஆண்டுகளில் ஜமாபந்தி மனுக்கள் மீது உரிய தீர்வு காணாமல் அதிகாரிகள் அலட்சியத்துடன் நடந்து கொண்டதே பொதுமக்களின் அதிருப்திக்கு காரணமாக உள்ளது. ஜமாபந்தியில் பெறும் மனுக்களில் விசாரணைக்குப் பின் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி, உரிய 'கவனிப்பு' இல்லாத மனுக்களை ஓரம் கட்டிவிடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கத்தலைவர் சோமசுந்தரம் கூறுகையில், ஜமாபந்தியில் கிராம நிர்வாக அலுவலகத்தில் பராமரிக்கும் மாதாவாரி சாகுபடி கணக்கு, நிலத்தைப்பற்றிய விபரங்கள், பட்டா மாறுதல் கணக்கு, நிலவரி தள்ளுபடி கணக்கு, தண்ணீர் தீர்வை, ரோஜ்வாரி, பிறப்பு இறப்பு பதிவேடு, கால்நடைகள் பதிவேடு, மழை கணக்கு, நிலவரி, கனிமங்கள் பதிவேடு உள்ளிட்ட 24வகையான கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், பலர் இந்த கணக்குகளை பராமரிப்பதே கிடையாது. ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க தவறிவிடுகின்றனர்.
பொதுமக்களின் குறைகளை தீர்க்க வேண்டிய வருவாய் தீர்வாயத்திலும், தீர்வு கிடைக்காததால் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்.
மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, நடப்பாண்டில் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றார்.