/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணல் குவாரிக்கு எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
/
மணல் குவாரிக்கு எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 22, 2025 07:58 AM
நெல்லிக்குப்பம்: வான்பாக்கத்தில் மணல் குவாரி அமைக்கக் கூடாது என, கவுன்சிலர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம், நெல்லிக்குப்பம் நகராட்சி கவுன்சிலர்கள் பா.ம.க., பன்னீர்செல்வம், தி.மு.க., ஸ்ரீதர், அ.தி.மு.க., மலையான் மற்றும் பொதுமக்கள் அளித்த மனு:
நெல்லிக்குப்பம் நகராட்சியில் உள்ள விஸ்வநாதபுரம், வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு மற்றும் பல பகுதிகள் பெண்ணையாற்றை ஒட்டியுள்ளது. இப்பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்கின்றனர்.
இதை நம்பி பல ஆயிரம் விவசாய தொழிலாளர்கள் உள்ளனர். மக்கள் கருத்தை கேட்காமல் வான்பாக்கம் பெண்ணையாற்றில் மணல் குவாரி அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. மணல் குவாரி அமையவுள்ள இடம் அருகிலேயே விஸ்வநாதபுரத்தில் தடுப்பணை உள்ளது.
மணல் குவாரி அமைத்தால் தடுப்பணை பாதிப்பதோடு நிலத்தடி நீரும் பாதிக்கும். எனவே மணல் குவாரி அமைக்கக் கூடாது. இதனை மீறி குவாரி அமைத்தால் போராட்டம் நடத்தப்படும்.