/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பாஸ் கொடுத்தும் பிரச்னை தீரவில்லை போலீசார் - அரசு பஸ் கண்டக்டர்கள் மோதல்
/
பாஸ் கொடுத்தும் பிரச்னை தீரவில்லை போலீசார் - அரசு பஸ் கண்டக்டர்கள் மோதல்
பாஸ் கொடுத்தும் பிரச்னை தீரவில்லை போலீசார் - அரசு பஸ் கண்டக்டர்கள் மோதல்
பாஸ் கொடுத்தும் பிரச்னை தீரவில்லை போலீசார் - அரசு பஸ் கண்டக்டர்கள் மோதல்
ADDED : ஆக 13, 2025 02:43 AM
தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், பஸ்களில் பயணிக்கும் போது இலவசமாக செல்ல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்தது. கைதிகளை அழைத்து செல்லும் போதும், வாரண்டை காண்பித்தும் அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.
நேரம், காலமின்றி பணியாற்றும் போலீசார், தங்கள் பணி நிமித்தமாகவும், வெளியூர்களுக்கு செல்லும் போதும், அடையாள அட்டையை காண்பித்து, சிலர் இலவசமாக பயணித்தனர். அதனை போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அனுமதிக்காததால், அடிக்கடி பிரச்னையும் ஏற்பட்டது.
இதனால், தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையினர் போராட்டங்களிலும் ஈடுபட்டதால், பெரிய சர்ச்சை எழுந்தது. இப்பிரச்னைக்கு முடிவு கட்டும் விதத்தில், போலீசார் அரசு பஸ்களில் பயணிக்க, பஸ் பாஸ் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி தற்போது, காவல் துறையினருக்கு பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது. கடலுார் மாவட்டத்தில் போலீசாருக்கான அரசு பஸ் பயண அட்டை சில மாதங்களுக்கு முன் வழங்கப்பட்டது.
அப்போது மாவட்டத்திற்குள் பயன்படுத்த அனுமதி, ஏ.சி., விரைவு பஸ்களில் பயன்படுத்த முடியாது, பஸ் பாசை கண்டக்டர், பரிசோதகர் கேட்கும்போது காண்பிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
ஆனால், பஸ்சில் பயணம் செய்யும் போலீசார் சீருடையில் இருக்கும் போது பல கண்டக்டர்கள் பாசை கேட்பதில்லை. சீருடை இல்லாமல் பயணிக்கும் போது, கண்டக்டர் பஸ் பாசை காண்பிக்க சொல்லி கேட்கும் போது, ஈகோ பிரச்னை உருவாகி வாக்குவாதம் ஏற்படுகிறது.
போலீசாருக்கு பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளதை பயன்படுத்தி போலிகள் சிலர், போலீஸ் போல கையை காண்பித்து விட்டு பயணம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சந்தேக நபர்களிடம் பஸ் பாஸை கேட்கும்போது தகராறு ஏற்படும் சூழல் உருவாகிறது. இதனால் ஒரிஜினில் யார், போலி யார் என கண்டுபிடிக்க முடியாமல் கண்டக்டர்கள் தடுமாறுகின்றனர்.