/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ்... அதிரடி; விருதையில் 9 தனிப்படையினர் வீடு வீடாக சோதனை
/
மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ்... அதிரடி; விருதையில் 9 தனிப்படையினர் வீடு வீடாக சோதனை
மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ்... அதிரடி; விருதையில் 9 தனிப்படையினர் வீடு வீடாக சோதனை
மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீஸ்... அதிரடி; விருதையில் 9 தனிப்படையினர் வீடு வீடாக சோதனை
ADDED : செப் 23, 2024 08:06 AM

மாவட்டத்தில் கொலை, கொள்ளை, அடிதடி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க எஸ்.பி., ராஜாராம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். முதற்கட்டமாக 2011 முதல் 2024ம் ஆண்டு வரை குற்றச் செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள், ரவுடி பட்டியலில் உள்ளவர்கள், கஞ்சா, குட்கா, கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வோரின் தற்போதைய நடவடிக்கைகளை கண்டறிய போலீசாருக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், விருத்தாசலம் உட்கோட்டத்தில் டி.எஸ்.பி., கிரியாசக்தி தலைமையில் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் சந்துரு உட்பட விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம், மங்கலம்பேட்டை, ஆலடி, பெண்ணாடம் போலீஸ் ஸ்டேஷன்களை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, உட்கோட்டம் முழுவதும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள குற்றவாளிகளின் பட்டியல் மூலம் கொலை, கொள்ளை, கஞ்சா வழக்கில் கைதான நபர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் வாழ்க்கை முறை, தற்போதைய வேலை, ஏதேனும் குற்றச்செயல்களில் மீண்டும் தொடர்கின்றனரா என, அவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக விசாரணை நடத்தினர்.
இடம் பெயர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா அல்லது ஓட்டல், பெயிண்டிங் போன்ற மாற்று பணிக்கு செல்கிறார்களா என, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டது.
அப்போது, ஏற்கனவே, குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களிடம், மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படும் என எச்சரித்ததுடன், நேர்மையாக வாழும் நபர்களின் நன்னடத்தையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கறவை மாடு, பெட்டிக்கடை போன்ற மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்து தர பரிந்துரை செய்யப்படும் என, தெரிவித்தனர்.
விருத்தாசலம் உட்கோட்ட பகுதிகளில் நேற்று காலை 6:00 மணி முதல் மாலை வரையில், தனிப்படை போலீசார் பழைய குற்றவாளிகளின் வீடுகளுக்கே சென்று விசாரணை நடத்திய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது.