/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2 பிள்ளைகளுடன் தாய் மாயம் போலீசார் விசாரணை
/
2 பிள்ளைகளுடன் தாய் மாயம் போலீசார் விசாரணை
ADDED : ஜன 26, 2025 06:58 AM
பாகூர் : பாகூர் அருகே இரண்டு பிள்ளைகளுடன் தாய் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கரையாம்புத்துார் அடுத்த பனையடிகுப்பம், வையாபுரி நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார், 36; தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 7 ஆண்டுகள் முன், அதே பகுதியைச் சேர்ந்த தீபா, 27; என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன், 8 மாத பெண் குழந்தை உள்ளனர்.
கணவன் - மனைவி இடையே கருத்துவேறு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தீபா கோபித்து கொண்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். உறவினர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் மீண்டும் வீடு திரும்பி குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இதனிடையே, புதுச்சேரி பஸ் நிலையம் எதிரே உள்ள தனியார் ரெஸ்டாரண்டில் வேலைக்கு சென்று வந்த தீபாவை, அவரது கணவர் வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறி, நிறுத்தினார். இதனால், மீண்டும் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. கடந்த 17ம் தேதி இரவு சதீஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். மறுநாள் வந்து பார்த்த போது, வீட்டில் மனைவி மற்றும் பிள்ளைகளை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து சதீஷ்குமார், அளித்த புகாரின் பேரில், கரையாம்புத்துார் சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.