ADDED : ஏப் 05, 2026 11:33 PM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கணினி அறையில், சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு ஓட்டுச்சாவடிகளை கண்காணிக்க, நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் சிபி ஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
தேர்தல் பொது பார்வையாளர்கள் குகா பூனம் தபஸ் குமார், பிரீத்தி ஜெயின், அசிதா மிஸ்ரா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் கூறியதாவது:
கடலுார் மாவட்டத்தில், 9 சட்டசபை தொகுதிகளுக்கும் மொத்தம் 2590 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்தலை நியாயமான முறையில் நடத்திடும் பொருட்டு, இந்த தொகுதிகளில் உள்ள, 82 ஓட்டுச்சாவடி மையங்கள் நுண் பார்வையாளர்களால் கண்காணிக்கப்பட உள்ளன.
ஒரு மையத்திற்கு ஒரு நுண்பார்வையாளர் என, 82 நபர்களுடன் மேலும் 20 சதவீதம் இருப்புடன், 98 நுண்பார்வையாளர்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும், நுண்பார்வையாளர்கள் ஓட்டுச்சாவடி மையங்களில் நடப்பவைகளை கண்காணித்து, நேரடியாக தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் அளித்து ஓட்டுப்பதிவு சீரான முறையில் நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
