/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசாரின் எல்லை பிரச்னை பிரேத பரிசோதனை தாமதம்
/
போலீசாரின் எல்லை பிரச்னை பிரேத பரிசோதனை தாமதம்
ADDED : ஜன 21, 2025 05:07 AM

நெல்லிக்குப்பம் : கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 40; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதியம், நெல்லிக்குப்பம் அருகே பெண்ணையாற்றின் நடுவில் உள்ள புதுச்சேரி மாநில சாராய கடையில் சாராயம் குடித்தார். அங்கிருந்து வீட்டுக்கு வரும்போது, ஆற்றில் விழுந்து இறந்தார்.
தகவலறிந்து அங்கு சென்ற புதுச்சேரி கரையாம்புத்துார் போலீசார், 'சம்பவம் நடந்த இடம் எங்களது எல்லையில் வராது; தமிழக எல்லையில் உள்ளது' என கூறி திரும்பினர்.
நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் சென்று பார்வையிட்டு, 'அது, எங்கள் எல்லை இல்லை' என்றார்.
இதனால் இரு மாநில போலீசாருக்கும் வாக்குவாதம் நடந்ததால், பதற்றம் நிலவியது. சர்வேயர் மூலம் ஆற்றை அளந்து முடிவு செய்து கொள்ளலாம் என இருதரப்பினரும் கூறினர். அதன்படி, நேற்று காலை புதுச்சேரி மாநில சர்வேயர் ஆற்றை அளந்தார்.
அப்போது, அசோக்குமார் இறந்து கிடந்த இடம் தமிழக எல்லையில் வருவதாக கூறினார். அதை தொடர்ந்து, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்தனர்.
அசோக்குமார் உடலை பிரேத பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர். எல்லை தொடர்பாக இரு மாநில போலீசாருக்கிடையே ஏற்பட்ட பிரச்னை, 24 மணி நேரத்துக்கு பிறகு முடிவுக்கு வந்தது.

