
குறிஞ்சிப்பாடி: தடகளத்தில் சாதிக்கும் அரசு பள்ளி மாணவியை கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவி தீபிகா தடகளப்போட்டிகளில் சாதித்து வருகிறார்.
இவர் சமீபத்தில் நடந்த மாநில அளவிலான போட்டியில், தொடர் ஓட்டத்தில் 4 ம் இடம் பிடித்துள்ளார். இதையொட்டி, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் தலைமை ஆசிரியர் பிரதீப் வரவேற்றார். உதவி தலைமை ஆசிரியர் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தார்.
மாணவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் பாராட்டினார். பயிற்சி வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் தமிழேந்தல் மற்றும் மாணவியின் பெற்றோருக்கு கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், மாணவியின் வளர்ச்சிக்கு புதுச்சேரி தொழிலதிபர் கருணாகரன் சார்பில் ரூ.,10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொளஞ்சியப்பன், ராஜவேல், ராஜலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் சுந்தர்ராஜன் நன்றி கூறினார்.

