/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே மனுத் தாக்கலுக்கு... ஆயத்தம்; 6 நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்சியினர் தீவிரம்
/
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே மனுத் தாக்கலுக்கு... ஆயத்தம்; 6 நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்சியினர் தீவிரம்
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே மனுத் தாக்கலுக்கு... ஆயத்தம்; 6 நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்சியினர் தீவிரம்
வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே மனுத் தாக்கலுக்கு... ஆயத்தம்; 6 நாட்கள் மட்டுமே இருப்பதால் கட்சியினர் தீவிரம்
ADDED : மார் 20, 2024 05:20 AM
கடலுார் : லோக்சபா தேர்தலுக்கான மனுத் தாக்கல் இன்று துவங்கும் நிலையில், குறைந்த நாட்களே உள்ளதால், கடலுார் மாவட்டத்தில் பிரதான கட்சிகளின் நிர்வாகிகள் ஆவணங்களை தயார் படுத்தும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
லோக்சபா தேர்தல் தேதி, கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் ஏப்., 19ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்கிறது. தேர்தலை முன்னிட்டு கடலுார் மாவட்டம் முழுவதும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுதும் பறக்கும் படை அதிகாரிகள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் வகையில், கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு மனு தாக்கல் இன்று (20ம் தேதி) துவங்கி, 27 வரையில் நடக்கிறது. அதையொட்டி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் மனுத் தாக்கல் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் மற்றும் வாகனங்களை நிறுத்த நுழைவு வாயில் அருகில் 100 மீ., துாரத்தில் எல்லைக்கோடு, தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளது.
காலை 11:00 மணி முதல், மதியம் 3:00 மணி வரை மனுக்கள் பெறப்படுகிறது.
மனு தாக்கல் இன்று துவங்கும் நிலையில், 23ம் தேதி நான்காம் சனிக்கிழமை விடுமுறை. 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இந்த 2 நாட்களிலும் மனுக்கள் பெறப்படாது. எனவே, மொத்தம் 6 நாட்களே மனுத் தாக்கல் செய்ய அவகாசம் இருப்பதால் அரசியல் கட்சிகள் அதற்குள் வேட்பாளர்களை அறிவித்து மனுத் தாக்கல் செய்ய வேண்டிய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
காங்.,;அ.தி.மு.க.,; பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்கள் தேர்வில் முனைப்பு காட்டி வருகின்றன. ஓரிரு நாட்களில் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிதம்பரத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்டியல் வெளியாகவில்லை.
இதுபோன்ற சூழலில், கடலுார் மற்றும் சிதம்பரம் தொகுதியில் பிரதான கட்சிகளில், போட்டியிட விருப்ப மனு அளித்தவர்கள், தங்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மனுத் தாக்கல் செய்ய தேவையான ஆவணங்களை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
சுயேட்சை வேட்பாளர்களும் ஆவணங்களை தயார்படுத்தி வருகின்றனர்.

