ADDED : டிச 12, 2025 06:39 AM

சிறுபாக்கம்: மங்களூரில் நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
கடலுார் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9:00 மணியளவில் மங்களூரில் நடக்கிறது. அமைச்சர் கணேசன் தலைமை தாங்குகிறார். முகாமில் 200க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்று, 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தேர்வு செய்யப்படுவோருக்கு அன்றே பணி நியமன ஆணை வழங்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வழிகாட்டுதல், இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள் வழங்கப்படுகிறது.
இதில், மாவட்டத்தை சார்ந்த 8, 10, பிளஸ் 2 வகுப்பு, கலை மற்றும் அறிவியல், நர்சிங், வணிகப்பட்டதாரிகள், ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, சுயவிவர குறிப்பு ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
