/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் மாவட்டத்தில் திட்டப்பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
/
கடலுார் மாவட்டத்தில் திட்டப்பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலுார் மாவட்டத்தில் திட்டப்பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலுார் மாவட்டத்தில் திட்டப்பணிகள்; கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ADDED : ஜன 22, 2025 11:43 PM

கடலுார்; கடலுார், நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் காடாம்புலியூர் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன் தெரிவித்ததாவது:
கடலுார் மாநகராட்சியில் எதிர்கால தேவையினை கருத்தில்கொண்டு 5.27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்ணா சந்தை கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடலுார் மாநகர பஸ் நிலையத்தில் பொதுமக்களின் அடிப்படை தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் நவீன கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. அதன் பயன்பாடு மற்றும் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
மஞ்சக்குப்பம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 19.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தேவணாம்பட்டினம் கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அதிநவீன பொழுதுபோக்கு மின்சாதனங்கள் அமைத்தல், அழகிய வேலைப்பாடுடன் கூடிய பூங்கா, செயற்கை நீருற்றுகள், ஓய்வெடுக்கும் பகுதிகள், பெயர் பலகைகள், சாலை தடுப்புகள், அழகிய நடைபாதை, சிற்றுண்டி விற்பனை கடைகள், சில்வர் குப்பைத்தொட்டிகள் மற்றும் வாகன நிறுத்துமிடம் ஆகியவற்றினை அமைத்து தலைசிறந்த சுற்றுலா தலமாக மாற்ற மூலதன மானிய திட்ட நிதியின்கீழ் 4.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரசு தலைமை மருத்துவமனையில் அதிகப்படியான பொதுமக்கள் தினந்தோறும் வந்துசெல்வதால் அனைவருக்கும் சிறந்த சிகிச்சையினை வழங்கிடும் பொருட்டு 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகளுடன் அவசரப்பிரிவு கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் வெளி மாவட்டங்களுக்கு சென்று சிகிச்சை பெறும் நிலை தவிர்க்கப்பட்டு உள்ளூரிலே சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் கல்லுாரி மாணவிகள் தங்கி கல்வி பயின்று பயனடையும் வேண்டும் என்பதற்காக 5.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து வசதிகளுடன்கூடிய ஆதிதிராவிடர் நல மாணவிகள் விடுதி கட்டப்பட்டு வருகிறது என கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா, மாநகராட்சி கமிஷனர் அனு உடனிருந்தனர்.