குழந்தைகளுக்கு புரோட்டீன் மிட்டாய் வழங்கும் திட்டம் துவக்கம்
குழந்தைகளுக்கு புரோட்டீன் மிட்டாய் வழங்கும் திட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2026 05:11 AM

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய புரோட்டீன் மிட்டாய் வழங்கும் திட்டத்தினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மகளிர் திட்டம் மற்றும் கனிமவளத் துறை சார்பில் ஊட்டச்சத்துக்கள் அடங்கிய புரோட்டீன் மிட்டாய் வழங்கும் திட்டம் துவக்க விழா நடந்தது.
இது குறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியதாவது:
அங்கன்வாடி மைய குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடவும் ஊட்டச்சத்து குறைபாடற்ற குழந்தைகளை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக முட்டை, சத்துமாவு, கொண்டைக்கடலை, ஊட்டச்சத்து பிஸ்கட் மற்றும் மதியஉணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் குழந்தைகளின் வளர்ச்சியில் ஒரு சில குழந்தைகள் முழு ஆரோக்கியத்தை எட்டாமல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை நிவர்த்தி செய்வதற்காக, புரோட்டீன் அடங்கிய உணவு வழங்க திட்டமிடப்பட்டது. குழந்தைகளுக்கு பிடித்த சுவையில் மிட்டாய் தயாரிக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களில் பயன்பெறும் அனைத்து 2-6 வயது குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் பொருட்டு, தரமான புரதச்சத்து நிறைந்த புரோட்டீன் கட்டி வழங்கிட தீர்மானிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக 14 வட்டாரங்களில் 140 மையங்கள் உள்ள குழந்தைகள் பயன்பெறும் வகையில் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
இக்கட்டியில் கோதுமை, நிலக்கடலை, பால்பவுடர், வெல்லம், கோகோ பவுடர், தேன், பேரீச்சம்பழம் மற்றும் நெய் கலந்து மிட்டாய் தயார் செய்யப்பட்டள்ளது.
25 கிராம் உள்ள ஒரு புரோட்டீன் மிட்டாயில் 4.5 கிராம் புரதமும் மற்றும் 13 வகையான வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புகள் அடங்கியுள்ளன.
இந்த மிட்டாய்கள் குழந்தைகளுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை வாரத்திற்கு 5 நாட்கள் வீதம் 6 மாதங்கள் வரை வழங்கப்படவுள்ளது.
பெற்றோர் இந்த வாய்ப்பினை நல்ல முறையில் பயன்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
