ADDED : மார் 12, 2024 06:42 AM
நெல்லிக்குப்பம், : நெல்லிக்குப்பம் அருகே வீட்டுமனைப் பட்டா வழங்கும் விழாவை நிறுத்தக் கூறிய தி.மு.க., பிரமுகரை கண்டித்து பயனாளிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. அமைச்சர் கணேசன் பங்கேற்று, ஒரு சிலருக்கு மட்டும் வீட்டு மனைப்பட்டா, தையல் இயந்திரம உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கிவிட்டு கிளம்பினார். மீதியுள்ள பயனாளிகளுக்கு அதிகாரிகள் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
வருவாய் துறை மூலம் அண்ணாகிராமம் ஒன்றியம் பனப்பாக்கத்தை சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பனப்பாக்கத்தை சேர்ந்த தி.மு.க., முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வாசுகி, முன்பு பட்டா வழங்கியவர்களுக்கே வழங்குவதாக புகார் கூறி, பட்டா வழங்குவதை நிறுத்தக்கூறி வாக்குவாதம் செய்தார்.
இதனால் ஆத்திரமடைந்த பயனாளிகள் வாசுகியிடம் தகராறு செய்தனர். மேலும் வாசுகியின் செயலை கண்டித்து கடலூர் பண்ருட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இந்த மறியலால், கடலுார் - பண்ருட்டி சாலையில் மதியம் 2:00 மணி முதல் 2: 15 வரையில் போக்குவரத்து பாதித்தது.
