/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; பா.ஜ., நிர்வாகி உட்பட 45 பேர் கைது
/
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; பா.ஜ., நிர்வாகி உட்பட 45 பேர் கைது
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; பா.ஜ., நிர்வாகி உட்பட 45 பேர் கைது
ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு; பா.ஜ., நிர்வாகி உட்பட 45 பேர் கைது
ADDED : பிப் 06, 2025 07:16 AM

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்ட பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த மலையடிக்குப்பத்தில் அரசு தரிசு நிலம் 162 ஏக்கர் உள்ளது. நிலத்தைச் சுற்றி வசித்து வந்த பொதுமக்கள் 84 பேர், அந்த நிலைத்தை வீடுகள் மற்றும் விளைநிலமாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தை காலி செய்ய வருவாய்த்துறை நோட்டீஸ் கொடுத்தது.
கடந்த 1ம் தேதி, ஆர்.டி.ஓ.,அபிநயா தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இதை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜ. உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன.
இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்ற 6ம் தேதி வரை, உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. நேற்று தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது.
அதையடுத்து, நேற்று மதியம் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை அதிகாரிகள் துவக்கினர். இதைக்கண்டித்து பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தலைமையில் பா.ஜ.,வினர் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆர்.டி.ஓ., அபிநயா, தாசில்தார் பலராமன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் முந்திரி அறுவடை காலம் வரை அவகாசம் கேட்டனர். இதற்கு அதிகாரிகள் அனுமதி மறுத்ததால், பொதுமக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., மாநில செயலாளர் அஸ்வத்தாமன் மற்றும் 18 பெண்கள் உள்ளிட்ட 45 பேரை நடுவீரப்பட்டு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, ஆக்கிரமிப்பு நிலங்களில் இருந்த முந்திரி மரங்கள் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலம் வேரோடு பிடுங்கி, அகற்றப்பட்டன.