என்.எல்.சி., பங்கு விற்பனை நடவடிக்கை எதிராக ஆர்ப்பாட்டம்
என்.எல்.சி., பங்கு விற்பனை நடவடிக்கை எதிராக ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 15, 2026 10:46 PM

நெய்வேலி: என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் 3 சதவிகித பங்குகள் விற்பனைக்கு அந்நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்ட நடவடிக்கைகளை துவங்கினர்.
என்.எல்.சி., நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை விற்பதற்கு கடந்த 2006 ம் ஆண்டு மத்திய அரசு முயன்றபோது அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.
2011ம் ஆண்டுக்கு முன்பு,என்.எல்.சி., பங்குகள் மத்திய அரசிடம் 93 சதவிகித பங்குகள் இருந்தது. 7 சதவிகித பங்குகள் ஊழியர்கள் வசம் இருந்தது. அதே ஆண்டு ஐ.பி.ஓ., வெளியீட்டுக்கு பிறகு, அரசின் பங்கு 90 சதவிகிதமாக குறைந்தது. 2013 ம் ஆண்டு மத்திய அரசு 5 சதவிகித பங்குகளை விற்க போவதாக அறிவித்தது. அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பங்கு விற்பனை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் தமிழக அரசு சார்பில் 3.56 சதவிகித பங்குகளை வாங்கினார். அதனால் அப்போதும் பங்கு விற்பனை முயற்சி கைவிடப்பட்டது.
பின்னர், 2017ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ஓ.எப்.எஸ்., (ஆபர் பார் சேல்) நடவடிக்கைகள் மூலமாக அரசின் பங்குகள் 79.20 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. கடந்த 2024ம் ஆண்டு மீண்டும் 7 சதவிகித பங்குகள் விற்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் என்.எல்.சி.,யின் 3 சதவிகித பங்குகளை விற்க போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று என்.எல்.சி., தொழிற்சங்கங்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிவது, ஆர்ப்பாட்டம் செய்து போராட்ட நடவடிக்கைகளை துவக்கினர்.
