UPDATED : செப் 12, 2026 10:35 PM
ADDED : செப் 12, 2026 10:14 PM
கடலுார்: கடலுார், பெண்ணையாற்றின் கரையை உடைத்து வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.
கடலுார், பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் சுற்றுப்பகுதியில் உள்ள கங்கணாங்குப்பம் மற்றும் சுற்றியுள்ள 25க்கும்மேற்பட்ட கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக பெண்ணையாற்றின் இரு கரைகளிலும் வெள்ளத்தடுப்பு சுவர் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ஆல்பேட்டை அருகில் உள்ள பெண்ணையாற்றின் கரையை உடைத்து கனரக லாரிகள் சென்று வருவதால் சாலைகள் சேதமடைகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செந்தாமரை நகர் மக்கள் நேற்று ஆல்பேட்டை அருகே சாலை மறியல் செய்ய திரண்டு வந்தனர். புதுநகர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர். செந்தாமரை நகர் மக்கள் கூறுகையில், 'சாலையை விட மிகவும் தாழ்வான பகுதியில் செந்தாமரைநகர் உள்ளது. பெண்ணையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையை உடைத்துக்கொண்டு தண்ணீர் உட்புகுந்துவிடும்.
கடந்த முறை ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டோம். எனவே தான் கரையை உடைத்து செல்லாமல் வேறு வழியை பயன்படுத்த வேண்டும்' என்றனர்.
