ADDED : நவ 23, 2024 05:42 AM
பெண்ணாடம் : கிராம சாலையை சீரமைக்கக்கோரி, மக்கள் மறியலில் ஈடுபட்டதால், திட்டக்குடி - விருத்தாசலம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
பெண்ணாடம் அடுத்த மாளிகைக்கோட்டம், அய்யனார் கோவில் தெருவில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளதால் சாலை குறுகி உள்ளது. இதனால் இவ்வழியே செல்ல பொது மக்கள் சிரமம் அடைந்தனர். ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலையை அகலப்படுத்த வேண்டும் எனக்கூறி, நேற்று பகல் 1:45 மணியளவில் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் சமாதானம் பேசி, சாலையை அகலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
அதையேற்று 2:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் திட்டக்குடி - விருத்தாசலம் நெடுஞ்சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.