/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
/
பெருமாள் கோவில்களில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
ADDED : செப் 29, 2024 06:04 AM

கடலுார்: கடலுார் மாவட்ட பெருமாள் கோவில்களில், புரட்டாசி 2ம் சனிக்கிழமையொட்டி, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கடலுார் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று அதிகாலை 5:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமி தரிசனம் செய்தனர்.
புதுப்பாளையம் ராஜகோபாலசுவாமி கோவில் உள்ளிட்ட கடலுாரில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
விருத்தாசலம்
விருத்தாசலம் சாத்துக்கூடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் தாயார், பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம், ராஜ அலங்காரத்தில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதைபோல், பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மூலவர், திருப்பதி சீனிவாச பெருமாள் அலங்காரத்திலும்,உற்சவமூர்த்தி, புரட்டாசி மாதம் முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் சுப்ரபாத சேவை, கோமாலா சேவை,அர்ச்சனா சேவை, சாற்றுமுறை சேவை உள்ளிட்ட சிறப்பு அலங்காரங்களில், அருள்பாலிக்கிறார்.
பெண்ணாடம்
பெண்ணாடம் அடுத்த புத்தேரி ஸ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று மக்கள் நலன்பெற வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. மூலவர் சுவாமி காய்கறி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வ விநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், மூலவர் பாமா ருக்குமணி சமேதராய் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
சேத்தியாத்தோப்பு
சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள கமலவள்ளி தயார் சமேத வேதநாராண பெருமாள் கோவில், புரட்டாசி சனிக்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணத்தில் பிரசித்திபெற்ற பூவராகசுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி 2ம் சனிக்கிழமையொட்டி கோவிலில் உள்ள மூலவர் பெருமாள், அம்புஜவல்லிதாயாருக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. பின்னர் உற்சவர் யக்ஞவராகன், தேவி, பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.