விருதையில் ரயில்வே கேட் முறிந்து மினிலாரி மீது விழுந்ததால் பரபரப்பு
விருதையில் ரயில்வே கேட் முறிந்து மினிலாரி மீது விழுந்ததால் பரபரப்பு
ADDED : நவ 26, 2026 09:09 PM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் ரயில்வே கேட் முறிந்து மினிலாரி மீது விழுந்ததால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷன் அருகே நாச்சியார்பேட்டையில் விருத்தாசலம் – எருமனுார் செல்லும் சாலையின் குறுக்கே ரயில்வே கேட் உள்ளது.
இவ்வழியாக தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், இன்று (நவ.,26) இரவு 7:00 மணியளவில் ரயில் இன்ஜின் ஒன்று நாச்சியார்பேட்டை ரயில்வே கேட்டை கடந்து சென்றது.
இதன்காரணமாக, ரயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் கடந்தவுடன், மீண்டும் ரயில்வே கேட் திறக்கப்பட்டது.
அப்போது, அங்கு காத்திருந்த வாகனங்கள் ரயில்பாதை கடந்து சென்றபோது, ரயில்வே கேட்டின் ஒருபக்கம், மினிலாரி ஒன்றின் மீது முறிந்து விழுந்தது.
இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. உடன் தகவலறிந்து வந்த விருத்தாசலம் ரயில்வே ஊழியர்கள், முறிந்து விழுந்த கேட்டை அப்புறப்படுத்தி, வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து உடைந்த ரயில்வே கேட்டை அகற்றி, புதிய ரயில்வே கேட்டை அமைத்தனர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
