/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ.12 கோடியில் போடப்பட்ட சாலையில் மழைநீர் தேக்கம்
/
ரூ.12 கோடியில் போடப்பட்ட சாலையில் மழைநீர் தேக்கம்
ADDED : நவ 03, 2024 06:59 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் நகரில் 12 கோடி ரூபாயில் போடப்பட்ட தார் சாலை உள்வாங்கி மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கடலுார் - விருத்தாசலம் -- சேலம் (சி.வி.எஸ்.,) மாநில சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. கடலுார் பச்சையாங்குப்பம் -- விருத்தாசலம், விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை இரண்டு தொகுப்புகளாக பணிகள் முடிந்தன.
மேலும், கடலுார் சாலையில் உள்ள விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து பெரியார் நகர், தாலுகா அலுவலகம் வரையும், மணவாளநல்லுார் ஊராட்சி எல்லையில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் பிரிவு சாலை வரை என மொத்தமாக 3, 100 மீட்டர் தொலைவிற்கு, 12 கோடி ரூபாயில் நான்கு வழிச்சாலை போடப்பட்டது.
இதற்காக, இருபுற சாலையோரம் இருந்த மின் கம்பங்களை இடமாற்றம் செய்து, கல்வெர்ட்டுகளை அகலப்படுத்தி, விரிவாக்கம் செய்யப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் நலன் கருதி இருபுறம் புட்பாத் போடப்பட்டது.
இந்நிலையில், பெரியார் நகர் வாட்டர் டேங்க் அருகே சாலை உள்வாங்கியதால், சமீபத்தில் பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அப்பகுதியை சீரமைக்காமல் விட்டால், மேலும் பழுதாகும் அபாயம் உள்ளது.
12 கோடி ரூபாயில் போடப்பட்ட சாலை உள்வாங்கியதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பழுதான பகுதியை உடனடியாக சீரமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.