ADDED : ஏப் 02, 2025 10:37 PM

கடலுார் ; கடலுாரில் ஆட்டோக்களில் பயன்படுத்திய அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை போலீசார் அகற்றினர்.
கடலுார் மாநகராட்சியில் இயக்கப்படும் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த ஏர் ஹாரன்களை பயன்படுத்துவதால், எதிர்பாராத சத்தத்தால் வாகன ஓட்டிகள் பதற்றமடைந்து, விபத்தில் சிக்குகின்றனர்.
இதையடுத்து, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அமர்நாத் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் மற்றும் போலீசார் நேற்று கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த 15 ஆட்டோக்களில் பொருத்தப்பட்டிருந்த ஏர் ஹாரன்களை அகற்றினர்.
மேலும், அதிக ஒளி எழுப்பக்கூடிய எல்.இ.டி., விளக்குகளையும் போலீசார் அகற்றினர்.
இதை தொடர்ந்து, ஏர் ஹாரன்கள் பொருத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

