ADDED : டிச 24, 2025 06:12 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டியிருந்த ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டது.
சிதம்பரம் வேங்காண் தெருவில் மாணிக்கவாசகர் பர்ணசாலை, ஆத்மநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பொதுமக்கள் சிலர் வீடுகள் கட்டி வாழ்ந்து வந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றநீதிமன்ற உத்தரவிட்டது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலை சுற்றி இருந்த பல குடும்பத்தினர் தாங்களாக வீடுகளை காலி செய்தனர். சில வீடுகளை அறநிலையத்துறையினர் அகற்றினர்.
இந்த நிலையில் நேற்று மீதமுள்ள 4 வீடுகளை அகற்ற அறநிலையத்துறை கடலுார் உதவி ஆணையர் சந்திரன் தலைமையில், சிதம்பரம் டி.எஸ்.பி., பிரதீப் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்க சென்றனர். அப்போது, ஆக்கிரமிப்பாளர்களுக்கும் போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
பா.ம.க., இந்திய கம்யூ., கட்சியினர் ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதைத்தொடர்ந்து அறநிலை துறையினர் 2 வீடுகள் மட்டும் இடித்து அகற்றினர். மீதமுள்ள வீடுகள் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

