/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
'பிளாக்' ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற கோரிக்கை: அனைத்து வண்டிகளும் நின்று செல்லுமா?
/
'பிளாக்' ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற கோரிக்கை: அனைத்து வண்டிகளும் நின்று செல்லுமா?
'பிளாக்' ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற கோரிக்கை: அனைத்து வண்டிகளும் நின்று செல்லுமா?
'பிளாக்' ரயில்வே ஸ்டேஷனாக மாற்ற கோரிக்கை: அனைத்து வண்டிகளும் நின்று செல்லுமா?
ADDED : ஜன 11, 2025 05:02 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை, 'பிளாக்' ஸ்டேஷனாக மாற்றி, பல்வேறு வசதிகள் செய்துத்தர திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கு, ரயில் பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை வரை, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது.
அப்போது, நடைபதை தாழ்வாக இருந்ததால், பயணிகள் ரயிலில் ஏறும்போதும், இறங்கும்போதும் அடிக்கடி விபத்து நடந்து வந்தது. தற்போது, நடைபாதையின் உயரம் உயர்த்தப்பட்டதால் பயணிகள் நிம்மதியடைந்தனர்.
பரங்கிப்பேட்டை பகுதி, ஒரு காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நகரமாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், பரங்கிப்பேட்டையில் இரும்பு தொழிற்சாலை இருந்ததால், இங்கிருந்து வெளிநாடுகளுக்கு கப்பல் மூலம் இரும்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. பல நுாறு ஆண்டுகளுக்கு முன்பே போக்குவரத்திற்கு புகழ்பெற்ற பரங்கிப்பேட்டையில், தற்போது ரயில் நிலையம் இருந்தாலும் அதனால், பொதுமக்களுக்கு பெரிதாக எந்தவித பயனும் இல்லை.
விழுப்புரம்- மயிலாடுதுறை வழித்தடத்தில் உள்ள பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தினமும் வேலை மற்றும் வியாபாரம் நிமித்தமாக கடலுார், புதுச்சேரி, விழுப்புரம், சென்னை, சேலம், விருத்தாசலம், நெய்வேலி, சீர்காழி, மயிலாடுதுறை போன்ற ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.
ஆனால், இங்கு போதிய ரயில் சேவை இல்லை. சென்னை போன்ற மாநகரங்களுக்கு செல்ல வசதியாக எக்ஸ்பிரஸ் ரயில்கள் பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், நின்று செல்வதில்லை.
மயிலாடுதுறை- விழுப்புரம் இடையே காலை, மாலை இரவு நேரங்களில் இயக்கப்படும் பயணிகள் ரயில் மட்டுமே பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று செல்கிறது.
இதுதவிர காலை நேரத்தில், காரைக்காலில் இருந்து பெங்களூர் செல்லும் பயணிகள் ரயிலும், மாலை நேரத்தில் பெங்களூரில் இருந்து காரைக்கால் செல்லும் ரயிலும், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், நின்று செல்கிறது.
மேலும், பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த காலங்களில் இருந்ததுபோல் 'பிளாக்' (அனைத்து வண்டிகளும் நின்று செல்லும்) ஸ்டேஷனாக மாற்றி அமைத்திடவும், விரைவு ரயில்கள் நின்றுச்செல்ல வசதியாக நடைபாதையின் நீளத்தை அதிகப்படுத்தித்தர வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.
எனவே, பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தை 'பிளாக்'ஸ்டேஷனாக மாற்றி அமைத்திடவும், நடைபாதையின் நீளத்தை அதிகப்படுத்தியும், விரைவு ரயில்கள் நின்றுச்செல்லவும் மற்றும் அடிப்படை வசதிகள் செய்துத்தர திருச்சி கோட்ட ரயில்வே உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில் பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.