தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைந்து துவக்க கோரிக்கை

 புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைந்து துவக்க கோரிக்கை

 புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைந்து துவக்க கோரிக்கை


ADDED : பிப் 16, 2026 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 07:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திட்டக்குடி: திட்டக்குடி மற்றும் பெண்ணாடத்தில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டப் பணிகளை விரைந்து துவக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கடலுார் - திருச்சி நெடுஞ்சாலை மார்க்கத்தில் திட்டக்குடி முக்கிய பகுதியாகவும், தாலுகா தலைமையிடமாகவும் உள்ளது.

இங்கு சுற்றியுள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அசனாம்பிகை அம்மன் உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில், எம்.எல்.ஏ., அலுவலகம், தாலுகா, நகராட்சி, சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. அரசு, தனியார் பள்ளிகள், அரசு கல்லுாரி மற்றும் நுாற்றுக்கணக்கான வணிக நிறுவனங்களும் செயல்படுகின்றன.

இப்பகுதியில் உள்ள, 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து திட்டக்குடியை மையமாக வைத்துதான் செல்கிறது.

கிராம பகுதிகளில் இருந்து வெளியூர்களில் வேலை பார்க்கும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தங்களின் பைக்குகளில் திட்டக்குடி வந்து அங்கிருந்து பஸ் மூலம் விருத்தாசலம், தொழுதுார், கள்ளக்குறிச்சி, அரியலுார், பெரம்பலுார், திருச்சி, கடலுார் உட்பட பல பகுதி களுக்கு செல்கின்றனர்.

இதன் காரணமாக காலை, மாலை நேரங்களில் வதிஷ்டபுரம், தாலுகா அலுவலகம், பஸ் நிலையம், கடைவீதி, அரசு பெண்கள் பள்ளி, ஆவட்டி சாலை ஆகிய பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்து கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விபத்துகளும் நாளுக்குநாள் தொடர்கிறது. போக்குவரத்து பாதிப்பை போக்க திட்டக்குடியில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதையேற்று, கடந்த 2015ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு சார்பில் திட்டக்குடியில் புறவழிச்சாலை அமைக்க அறிவிப்பு வெளியிட்டது.

இதற்காக கோழியூர் முதல் கீழ்ச்செருவாய் பஸ் நிறுத்தம் வரை 8 கி.மீ., துாரத்திற்கு நெடுஞ்சாலைத்துறையினர் அரசு புறம்போக்கு, தனியார் நிலங்களில் நில அளவீடு பணிகளிலும் ஈடுபட்டனர். ஆனால் துவங்கிய ஓரிரு மாதங்களிலேயே பணிகள் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் அரசியல் கட்சியினர் அவ்வப்போது திட்டக்குடிக்கு புறவழிச்சாலை திட்டம் துவங்கப்படும் என பேசுவது மட்டும் உள்ளது. திட்டக்குடியில் போக்குவரத்து பாதிப்பு, விபத்துகள் அடிக்கடி நிகழ்வது மட்டும் தொடர்கிறது.

இதேபோன்று, பெண்ணாடம் புறவழிச்சாலை அமைக்க கடந்த, 2023ல் மே.,15ம்தேதி அரியராவி, தி.அகரம், கொத்தட்டை, பெ.கொல்லத்தங்குறிச்சி ஆகிய பகுதிகளில் நில அளவீடு செய்யும் பணியும், அதே மாதத்தில் 18ம் தேதி 'டிரோன்' மூலம் எல்லைகள் மற்றும் துாரம் அளவீடு செய்யும் பணி, அதே ஆண்டில் டிசம்பர் மாதம் 31ம் தேதி கல் நடும் பணி துவங்கியது.

ஆனால், இதுவரை திட்டக்குடி, பெண்ணாடத்தில் புறவழிச்சாலை துவங்க நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் எவ்வித பணிகளும் மேற்கொள்ளாமல் உள்ளதால் நகர் பகுதிகளில் வாகனங்கள் செல்வதுடன், அசுர வேகத்தில் செல்லும் கனரக வாகனங்களால் அடிக்கடி வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுவது மட்டும் தொடர்கிறது.

திட்டக்குடி, பெண்ணாடத்தில் கிடப்பில் போடப்பட்ட புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து துவக்க மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us