/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை... குறைவு; கிலோவுக்கு ரூ. 10 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
/
நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை... குறைவு; கிலோவுக்கு ரூ. 10 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை... குறைவு; கிலோவுக்கு ரூ. 10 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை... குறைவு; கிலோவுக்கு ரூ. 10 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
ADDED : செப் 13, 2025 06:55 AM

கடலுார் : தமிழகத்தில் குறுவை நெல் அறுவடை சீசன் தீவிரம் அடைந்துள்ளதால் அரிசி விலை கிலோவிற்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் மே, ஜூன் மாதங்களில் குறுவை நெல் சீசன் துவங்கி ஆக., -- செப்., மாதங்களில் முடிவடைகிறது. இந்த பருவத்தில் காவிரி கடைமடை பகுதிகளான சிதம்பரம், கிள்ளை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் மற்றும் கடலுார், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 1.5 லட்சம் ஏக்கர் அளவிற்கு ஆண்டுதோறும் குறுவை நெல் பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
தற்போது நிலவி வரும் சூழ்நிலையில் மனித உழைப்பை நம்பி இல்லாமல் இயந்திரத்தின் உதவியால் அனைத்தும் செய்யக்கூடியது நெற்பயிர் தான். அதனால் தான் தற்போது கடலுார் மாவட்டத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படும் கரும்பு, சவுக்கு போன்றவற்றை விடுத்து நெல் பயிரிடும் போக்கு விவசாயிகள் மத்தியில் அதிகரித்துள்ளது.
குறுவை நெல் விளைந்து தற்போது அறுவடை பணி துவங்கி நடந்து வருகிறது. இன்னும் சில வட்டாரங்களில் நெல் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
இந்நிலையில் நல்ல விளைச்சல் காரணமாக கூடுதல் நெல் கிடைத்து வருகிறது.
இதேப் போன்று, கர்நாடகா, ஆந்திராவிலும் குறுவை பட்டத்தில் நெல் விளைச்சல் அதிகரித்துள்ளது. அங்குள்ள நெல்லை அரவை செய்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
அரவையின் போது, பதர், கருப்பு, கல் நீக்கி, பாலிஷ் செய்யப்பட்டு சிறு, சிறு, பாக்கெட்டுகளாக, அல்லது சிப்பங்களாக பிடித்து தமிழகத்தில் அரிசி விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது. 70 ரூபாய்க்கு விற்பனையான பொன்னி அரிசி தற்போது 60 ரூபாய்க்கும், 72க்கு விற்பனையான சோனா பொன்னி ஒரு கிலோ அரிசி 62 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
55 ரூபாய்க்கு விற்பனையான இட்லி அரிசி, தற்போது 45 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. பி.பி.டி., சன்ன ரகம் அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஐ.ஆர்.50 ரக அரிசி 55 ரூபாயில் 45 ரூபாயாகவும், என்.எல்.ஆர்., கிலோ 60 ரூபாயில் இருந்து 50 ரூபாயாக குறைந்துள்ளது.
நெல் வரத்து அதிகரிப்பால் அரிசி விலை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.