/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் முந்திரி சாகுபடி பாதிக்கும் அபாயம்: அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்களா?
/
மாவட்டத்தில் முந்திரி சாகுபடி பாதிக்கும் அபாயம்: அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்களா?
மாவட்டத்தில் முந்திரி சாகுபடி பாதிக்கும் அபாயம்: அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்களா?
மாவட்டத்தில் முந்திரி சாகுபடி பாதிக்கும் அபாயம்: அதிகாரிகள் ஆலோசனை வழங்குவார்களா?
ADDED : மார் 05, 2025 04:54 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் அதிகாரிகள் உரிய ஆலோசனை வழங்காத நிலையில், விவசாயிகள் முந்திரி மரங்களுக்கு தனியார் நிறுவனங்களின் பூச்சிக் கொல்லி மருந்தை பயன்படுத்துவதால் சாகுபடி பாதிக்கும் அபாயம் உள்ளது.
மாவட்டத்தில் பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதியில் 28,500 ஆயிரம் ெஹக்டர் பரப்பளவில் முந்திரி சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 9.99 சதவீதம் ஆகும். ஆனால் 'தானே' புயலுக்கு பின் முந்திரி உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது.
இந்நிலையில், மாவட்டத்தில் முந்திரி மரங்கள் கடந்த தை மாதம் முதல் பூக்கள் வைத்துள்ளன. ஆனால், உற்பத்தியை அதிகரிக்க வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எந்த ஆலோசனைகளையம் விவசாயிகளுக்கு வழங்கவில்லை.
ஆண்டுக்கு ஒரு முறை பூ வைத்து, காய்க்க துவங்கும் நிலையில் முந்திரி கொட்டைகள் வரும் வரை முந்திரி காட்டில் இரவு, பகல் என, பாராமல் விவசாயிகள் உழைக்கின்றனர். தற்போது, முந்திரி மரங்களில் பூச்சிகள் வராது எனக்கூறி பல தனியார் நிறுவனங்கள் பூச்சிக் கொல்லி மருந்தை கிராமங்கள் தோறும் விற்பனை செய்து வருகின்றன. கடந்தாண்டு தனியார் நிறுவனங்களின் பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தியதால் ஏராளமான விவசாயிகள் முந்திரி உற்பத்தி இல்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.
முந்திரி பூ வைக்கும் நேரத்தில் எந்த மருந்து அடிக்க வேண்டும்; எந்த உரம் இட வேண்டும் என்ற விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பூச்சி மருந்து வியாபாரிகள் தான் ஆலோசகராக செயல்படுகின்றனர்.
முந்திரி உற்பத்தியை பெருக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வேளாண் மற்றும் தோட்டக்கலை அதிகாரிகளை கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க முன்வருவதில்லை. அதிகாரிகளை பார்ப்பதே அரிதாக உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். பண்ருட்டியில் வேளாண் மற்றும் தோட்டக்கலை அலுவலகத்திற்கு உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் கையெழுத்து விட்டு ஓரிரு விவசாயிகளை மட்டும் ஒப்புக்கென சந்தித்துவிட்டு சென்றுவிடுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்தாண்டு மீண்டும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, வேளாண் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உரிய வழிகாட்டு முறைகளை விவசாயிகளுக்கு வழங்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.