/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வார சந்தையில் தொற்று நோய் அபாயம்: வளாகத்தை மேம்படுத்த கோரிக்கை
/
வார சந்தையில் தொற்று நோய் அபாயம்: வளாகத்தை மேம்படுத்த கோரிக்கை
வார சந்தையில் தொற்று நோய் அபாயம்: வளாகத்தை மேம்படுத்த கோரிக்கை
வார சந்தையில் தொற்று நோய் அபாயம்: வளாகத்தை மேம்படுத்த கோரிக்கை
ADDED : டிச 23, 2025 04:05 AM

வேப்பூர்: சென்னை-திருச்சி, கடலுார்-சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இங்கு பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளதால், சுற்றுப்புற கிராம மக்கள் தினசரி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வேப்பூரில்,1.43 ஏக்கர் பரப்பிலுள்ள வளாகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கிறது.
இங்கு காலையில் பிரபலமான ஆட்டுச்சந்தையும், பகல் மற்றும் இரவில் மளிகை பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகின்றன. ஆட்டுச்சந்தையில் ராமநாதபுரம், துாத்துக்குடி, மதுரை, திருக்கோவிலுாரை சேர்ந்த விவசாயிகள் வெள்ளாடு, செம்மறி, மால் ஆடுகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
அதனை வாங்கும் வியாபாரிகள், சென்னை, பெங்களூரு, ஐதராபாத் போன்ற பெருநகரங்களுக்கு இறைச்சிக்கு அனுப்புகின்றனர்.
பகல் மற்றும் இரவில் ஊட்டி, ஏற்காடு, நாமக்கல், ஆத்துார், தலைவாசலை சேர்ந்த வியாபாரிகள் காய்கறிகள், தானியங்கள், பழங்களை குறைந்த விலைக்கு விற்பதால் சுற்றுப்புற கிராம மக்கள் வாங்கி செல்கின்றனர். சாதாரண நாட்களில் ரூ.,3 கோடிக்கும், பண்டிகை நாட்களில் ரூ.,6 கோடிக்கு அதிகமாகவும், சந்தையில் வியாபாரம் நடக்கிறது.
ஊராட்சிக்கு வருவாய் வேப்பூர் ஊராட்சி சார்பில், ஆண்டுதோறும் மார்ச் மாதம் வாரச்சந்தை, குத்தகை ஏலம் நடக்கிறது. கோடிகளில் வியாபாரம் நடக்கும் இடம் என்பதால் வாரச்சந்தையை குத்தகை எடுப்பதில் போட்டி நிலவுகிறது. ஆண்டுதோறும் ரூ.,60 லட்சத்திற்கு மேல், குத்தகைக்கு விடப்படுகிறது. இதன் மூலம் பல்வேறு திட்டப் பணிகளை ஊராட்சி நிர்வாகம் நிறைவேற்றுகிறது.
கோடியில் வணிகமும், லட்சத்தில் ஊராட்சிக்கு வருவாயும் கொடுக்கும், இந்த சந்தை வளாகம் சுகாதாரமின்றி உள்ளது.
வளாக சுகாதார பராமரிப்பிற்கு, ரூ.1.30 லட்சத்தில் குப்பை உரக்கூடம், ரூ.,1 லட்சத்தில் மக்கும் மக்கா குப்பைகள் தரம் பிரிக்கும் கூடம் கட்டியும் பயனின்றி உள்ளது. சந்தையில் குப்பைத்தொட்டி இல்லாததால், ஆங்காங்கே குப்பை குவிந்து கிடக்கின்றன. கழிவறை சுத்தமின்றி உள்ளது. இதனால், பலர் திறந்தவெளியை கழிவறையாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்றுநோய் அபாயமும் அதிகரித்துள்ளது.
மேலும் சந்தையின் தென்கிழக்கு பகுதி தாழ்வாக உள்ளதால் மழைநீர் வெளியேற வழியின்றி குட்டையாக மாறியதில், குப்பைகள், ஆட்டு கழிவுகள் கலந்து காணப்படுகின்றன. இதனையொட்டி சாக்குகளை விரித்து காய்கறிகளை வியாபாரிகள் விற்று வருகின்றனர்.
சந்தையை பராமரித்து, துாய்மை பணி மேற்கொள்வதில் ஊராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளதால் சந்தைக்கு வருபவர்களுக்கு தொற்றுநோய் பாதிக்கும் அபாயம் உள்ளது. சந்தையில் பணம் கொடுத்து பொருட்களை வாங்குபவர்கள், கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.
மேம்படுத்த கோரிக்கை ஆட்டுச்சந்தை கட்டடம் பல ஆண்டுகளுக்கு முன், கட்டிய நிலையில், தற்போது பக்கவாட்டு சுவர், மேற்கூரைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தண்ணீர் தேங்குவதால் சந்தையின் ஒருபுறம் மட்டுமே காய்கறிகள் விற்கப்படுகின்றன.
பல வியாபாரிகள் வளாகத்திற்கு வெளியே வாகனங்களிலேயே விற்கின்றனர். தாழ்வான பகுதியை சீரமைத்து, ஆட்டுச்சந்தைக்கு புதிய கட்டடம், காய்கறிகள் சந்தைக்கு கூடுதல் கட்டடம், வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்டவைகளை அமைத்து சந்தையை மேம்படுத்த வேண்டும். இதனால், வியாபாரிகள் அதிகளவில் வந்து வியாபாரம் செய்ய வழி வகை ஏற்படும். மேலும், ஊராட்சிக்கு வருவாய் அதிகரிக்கும். சந்தை வளாகத்தை சுகாதாரத்துடன் பராமரிப்பதை அதிகாரிகள் கண் காணித்து, கட்டடங்களை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

