/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார், பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழா
/
கடலுார், பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழா
கடலுார், பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழா
கடலுார், பண்ருட்டி,நெல்லிக்குப்பம் பகுதிகளில் ஆற்றுத் திருவிழா
ADDED : ஜன 20, 2024 06:07 AM

கடலுார் : கடலுார், பெண்ணையாற்றில் ஆற்றுத் திருவிழாவையொட்டி, பொதுமக்கள் ஏராளமாக குவிந்தனர்.
தைப் பொங்கல் பண்டிகை முடிந்து ஐந்தாம் நாள் ஆற்றுத் திருவிழா நடப்பது வழக்கம். இந்தாண்டிற்கான ஆற்றுத் திருவிழா நேற்று கடலுார் ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நடந்தது.
இதனை முன்னிட்டு கடலுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளிய தீர்த்தவாரி நடந்தது.
கடலுார் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், ஆயிரக்கணக்கில் காலை முதல் குடும்பத்துடன் ஆற்றில் குவிந்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
இதில், கடலுார் ஆனைக்குப்பம் அண்ணா நகர் நாகவள்ளி அம்மன் சுவாமி, குர்குரே, லேஸ் போன்ற குழந்தைகள் தின்பண்டங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு, வீதியுலா நடந்தது.
மேலும் கும்தாமேடு முத்துமாரியம்மன், பெரியகாட்டுப்பாளையம் எல்லையம்மன், கண்டக்காடு முத்துமாரியம்மன், தட்சிணாமூர்த்தி நகர் புத்துநாகம்மன், புதுச்சேரி பச்சைவாழியம்மன், வம்பா பேட்டை முத்துமாரியம்மன், மதிகிருஷ்ணாபுரம் சீதாலட்சுமண ஆஞ்சநேய சமேத பட்டாபிராம சாமி, பிள்ளையார்குப்பம் அங்காள பரமேஸ்வரி, கிருமாம்பாக்கம் சோலைவாழி அம்மன் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து சாமிகள் கொண்டு வரப்பட்டு பெண்ணையாற்றில் தீர்த்தவாரி நடந்தது.
நெல்லிக்குப்பம்
விஸ்வநாதபரம்,வான்பாக்கம், முள்ளிகிராம்பட்டு, மேல்பட்டாம்பாக்கம், நத்தப்பட்டு பகுதிக ளில் பெண்ணையாற்றில் இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் திருவிழா நடந்தது. இதில் வேணுகோபால சுவாமி,செல்லியம்மன், சக்தி விநாயகர் உட்பட பல்வேறு கோவில்களில் இருந்து சுவாமிகள் வந்து தீர்த்தவாரி நடந்தது. ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
கடைகளில் சிறுவல்லி கிழங்கு, சர்க்கரைவல்லி கிழங்கு போன்றவற்றை மக்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.மக்கள் குடும்பத்துடன் உணவு எடுத்து வந்து சாப்பிட்டு ஆற்றில் பட்டம் விட்டும் விளையாடியும் மகிழ்ந்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.
பண்ருட்டி
பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தென்பெண்ணையாறு திருவிழாவிற்கு அருகில் உள்ள மேல்குமாரமங்கலம், புலவனுார், கள்ளிப்பட்டு,திருத்துறையூர், ஒறையூர்,கரும்பூர், எனதிரிமங்கலம்,காவனுார்,சத்திரம் ராசாப்பாளையம், மாளிகைமேடு, பணப்பாக்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் ஆற்றில் தீர்த்தவாரியில் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
பண்ருட்டி கெடிலம் ஆற்றங்கரையில் நடந்த திருவிழாவில் பண்ருட்டி படைவீட்டம்மன், காளியம்மன், திருவதிகை மாரியம்மன், சோமநாதாசுவாமி, மற்றும் சீரங்குப்பம், ஆண்டிக்குப்பம், புதுப்பிள்ளையார்குப்பம், மாளிகம்பட்டு, காடாம்புலியூர் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து உற்சவர் சுவாமிகள் தீர்த்தவாரியில் கலந்துகொண்டனர்.
பண்ருட்டி நகராட்சி சார்பில் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திருந்தனர்.