ADDED : பிப் 19, 2026 05:00 AM

கடலுார்: குறிஞ்சிப்பாடியில் கொலைமுயற்சி வழக்கில் கைதானவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில், கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் காய்கறி கடை வைத்துள்ளார்.
கடந்த ஜன.,15ம் தேதி அவரது கடைக்கு வந்த சுபாஷ்கர் என்பவர், உன் கடையில் வேலை செய்யும் ரஞ்சித் எங்கே எனக்கேட்டார்.
ரஞ்சித் வேலைக்கு வரவில்லை எனக்கூறிய ரமேஷை, சுபாஷ்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் வெட்டிக்கொலை செய்ய முயற்சித்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து சுபாஷ்கரை கைது செய்தனர்.
போலீஸ் விசாரணையில், நெய்வேலி மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த பக்கிரிசாமி மகன் சுபாஷ்கர்,25; என
தெரிந்தது.
அவர் மீது நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையத்தில் சரித்திர குற்ற பதிவேடு பராமரிக்கப்படுவதும், நெய்வேலி டவுன்ஷிப், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி, ஊமங்கலம், முத்தாண்டிக்குப்பம் ஆகிய காவல்நிலையங்களில் வழிப்பறி, கொலைமுயற்சி உள்ளிட் 10 வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரிந்தது.
அவரின் தொடர் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு, கடலுார் எஸ்.பி.,ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில், கலெக்டர் சிபிஆதித்யாசெந்தில்குமார், சுபாஷ்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒரு ஆண்டு சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மத்திய சிறையில் உள்ள சுபாஷ்கரிடம் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.
