சம்பா பட்ட விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீடு ரூ. 2.25 கோடி: குறுவை சாகுபடிக்கு ரூ. 2.09 கோடி வழங்கல்
சம்பா பட்ட விவசாயிகளுக்கு வழங்கிய இழப்பீடு ரூ. 2.25 கோடி: குறுவை சாகுபடிக்கு ரூ. 2.09 கோடி வழங்கல்
UPDATED : ஆக 04, 2026 08:21 PM
ADDED : ஆக 04, 2026 08:10 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் சம்பா பட்டத்தில், நெல் பயிரில் சராசரி மகசூலை விட குறைவாக கிடைத்த 15 கிராம விவசாயிகளுக்கு ரூ.2.25 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்து, மகசூல் இழப்பு ஏற்பட்டால் அதனை சரி செய்யும் விதமாக இழப்பீடு வழங்கப்படுகிறது. விவசாயிகள் பயிர்கடன் பெறும் கூட்டுறவு அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளைகளில் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம். பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நெல், எள், மக்காச்சோளம், கரும்பு, கம்பு, வேர்க்கடலை, உளுந்து என, 10க்கும் மேற்பட்ட பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பயிர் காப்பீடு செய்த பயிர் சாகுபடியில், சராசரி அளவை விட குறைந்தளவில் மகசூல் கிடைத்தால் இழப்பீடு வழங்கப்படும்.
அந்த வகையில் கடலுார் மாவட்டத்தில் சம்பா மற்றும் குறுவை நெல் சாகுபடியில் விவசாயிகளுக்கு 4.34 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.இதுகுறித்து வேளாண் துறை அதிகாரி கூறியதாவது: கடலுார் மாவட்டத்தில் 2025ம் ஆண்டு ஏப்ரல் முதல், இந்தாண்டு மார்ச் வரை குறுவை பருவத்தில் 4,108 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த 5,089 எக்டர் குறுவை நெற்பயிரை காப்பீடு செய்தனர்.
இதில் உத்திரவாத மகசூலை விட சராசரி மகசூல் குறைவாக கிடைத்த கீழ் அருங்குணம், மேல் அருங்குணம், அங்குசெட்டிப்பாளையம் உட்பட 18 கிராமத்தில் உள்ள 1,190 விவசாயிகளுக்கு 2 கோடியே 9 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சம்பா பட்டத்தில், 73,887 விவசாயிகள் 71,905 எக்டர் பரப்பளவு காப்பீடு செய்தனர். இதில் உத்திரவாத மகசூல் சராசரி மகசூலை விட குறைவாக கிடைத்த சிவாயம், மஞ்சக்கொல்லை உட்பட 15 கிராமங்களில் பதிவு செய்த விவசாயிகளுக்கு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.
காரீப் எள் பயிரில் 35 விவசாயிகளும், காரீப் கம்பு பயிரில் 4 விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்தனர். இப்பயிர்களில் சராசரி மகசூல் உத்தரவாத மகசூலை விட அதிமாக கிடைத்ததால் இழப்பீடு கிடைக்கவில்லை. மக்காச்சோளப் பயிரில் 17,155 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த 18,693 எக்டேர் பரப்பை பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர். இதில், சராசரி மகசூல் உத்தரவாத மகசூலை விட அதிகமாக கிடைத்ததால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
உளுந்து பயிரில் 9,410 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த 7,778 எக்டர் பரப்பை காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர். இதில், சராசரி மகசூல் உத்தரவாத மகசூலை விட அதிகமாக கிடைத்ததால் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கவில்லை.
நெல் நவரை பயிரில் 345 விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த 789 எக்டர் பரப்பை பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தனர். இதில், உத்திரவாத மகசூல் மற்றும் சராசரி மகசூல் கணக்கீடு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
