தாழங்குடா முகத்துவாரத்தை ஆழப்படுத்த திட்ட மதிப்பீடு ரூ.50 கோடி!அரசு அனுமதி அளித்த பின் நிதி ஒதுக்கீடு பெறப்படும்
தாழங்குடா முகத்துவாரத்தை ஆழப்படுத்த திட்ட மதிப்பீடு ரூ.50 கோடி!அரசு அனுமதி அளித்த பின் நிதி ஒதுக்கீடு பெறப்படும்
UPDATED : ஆக 18, 2026 09:39 PM
ADDED : ஆக 18, 2026 09:12 PM

கடலுார்:தென்பெண்ணையாறு கடலில் கலக்கும் இடமான தாழங்குடா அருகே முகத்துவாரத்தை ஆழப்படுத்த ரூ.50 கோடி மதிப்பில் அரசுக்கு திட்ட மதிப்பீடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
'வானலியில் வெண்ணை உருகும் முன், பெண்ணையில் வெள்ளம் பெருகும்' என்பது பழமொழி. தென் பெண்ணையாற்றில் அவ்வளவு வேகமாக வெள்ளம் ஏற்படும். மைசூர் நந்தி துர்காவில் உருவாகி சாத்தனுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை கடந்து கடலுார் மாவட்டத்திற்குள் தென்பெண்ணையாறு நுழைகிறது. வரும் வழியில் உள்ள பல அணைக்கட்டுகள், செக்டேம்கள் கடந்து வருவதால் அதன் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது.
இறுதி கட்டமாக கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள படுகை அணையில் இருந்து புரண்டு ஓடும் தண்ணீர் வங்கக்கடலில் கலக்கிறது. இதனால் ஆண்டுதோறும் பெண்ணையாறு கலக்கும் இடத்தில் உள்ள பல கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி பல சேதங்களை உருவாக்குகின்றன. காரணம் பெண்ணையாற்றின் வெள்ளநீர் மட்டுமல்லாமல் புதுச்சேரி மாநிலம், பாகூர் ஏரியில் இருந்து உபரி நீர் முள்ளோடை பாலம் வழியாக சின்னாற்றை கடந்து பெண்ணையாற்றில் கலக்கிறது.
ஒரே நேரத்தில் பெண்ணையாற்று தண்ணீரும், பாகூர் ஏரித்தண்ணீரும் சங்கமிப்பதால் அருகில் உள்ள கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. இந்த தருணத்தில் கிராமங்களில் இருந்து சிலர் முகத்துவாரத்திற்கும், கடலுக்கும் இடைப்பட்ட மணல் மேட்டை அகற்றி பெண்ணையாற்றுத் தண்ணீரை வடிய வைத்தால்தான் கடலில் சென்று கலக்கும். அவ்வாறு தொடர்ந்து தண்ணீர் வரத்து இருந்தால் மட்டுமே முகத்துவாரத்தில் ஆழம் அப்படியே இருக்கும்.
இல்லையென்றால் இந்த ஆழப்பகுதி 3 அல்லது 6 மாதத்தில் படிப்படியாக கடலில் இருந்து வரும் அலையால் துார்க்கப்பட்டுவிடும். இதனால் மீன் பிடிப்பவர்கள் தங்கள் விசைப்படகுகளை செலுத்த முடியாத நிலை ஏற்படுவதால் முகத்துவாரத்தை ஆழப்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அதையொட்டி பொதுப்பணித்துறை, தென்பெண்ணையாற்றின் கடைசி பகுதியான முகத்துவாரத்தை ஆழப்படுத்தவும், மீண்டும் அந்த ஆழம் துார்ந்துவிடாதபடி இரண்டு பக்கவும் கருங்கற்கல் கொட்டி பாதுகாக்கவும் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்காக திட்டமதிப்பீடு 50 கோடி ரூபாயில் தயார் செய்யப்பட்டு அரசின் முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிதி ஒதுக்கீடு மற்றும் அனுமதி பெற்றபின் டெண்டர் விடப்படும். இதன் விளைவாக ஆண்டு முழுவதும் கடலில் ஏற்படும் தண்ணீர் பாய்ச்சல், வடிச்சல் போன்ற மாற்றங்கள் பெண்ணையாற்றிலும் ஏற்படும்.
