ADDED : மே 15, 2026 04:03 AM

கடலுார்: ஊரக வளர்ச்சி துறையின் வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, பேவர் பிளாக் மற்றும் தார் சாலை, சுடுகாடு, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் குறித்து ஆய்வு நடந்தது.
அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதார பணிகள், கிராமப்புற நுாலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன்மன், கனவு இல்லம், தொல்குடி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.
மேலும் இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்த அளவில் குடியிருப்புகள் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து ஊராட்சிகளிலும் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும்.
சாலை பணிகள், குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் கூடுதல் கலெக்டர் பிரியங்கா, செயற்பொறியாளர் வரதராஜபெருமாள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
