/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பெண்ணையாற்றில் மணல் திட்டு அகற்றும் பணி தீவிரம்
/
பெண்ணையாற்றில் மணல் திட்டு அகற்றும் பணி தீவிரம்
ADDED : மார் 15, 2025 10:32 PM
கடலுார்; தினமலர் செய்தி எதிரொலியால், கடலுார் அருகே பெண்ணையாறு கரையை சீரமைப்பதோடு, ஆற்றின் மையப் பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றும் பணி துவங்கி உள்ளது.
கடலுார் மாவட்டத்திற்குள் பாயும் பெண்ணையாறு மழை வெள்ள காலங்களில் கரைகள் உடைந்து, அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது.
இதன் காரணமாக ஆற்றின் இரு கரைகளையும் பலப்படுத்த முடிவு செய்யப்பட்டது. வடக்கு கரைப்பகுதியில் பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி நடந்தது.
இப்பணியின்போது, ஆற்றில் உள்ள மணலையே எடுத்து சுவர் கட்டியதால் மீண்டும் மழை வெள்ளத்தின்போது பல இடங்களில் கரை உடைந்து சேதத்தை ஏற்படுத்தியது. பல கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் வெளியே வர முடியாமல் தத்தளித்தனர்.
குறிப்பாக, கடலோரத்தை ஒட்டி அமைந்துள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, சுபா உப்பலவாடி, தியாகுநகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன.
பெண்ணையாற்றின் மையப்பகுதியில் உருவாகியுள்ள மணல் திட்டு, கருவேல முள் காடுகள்தான் தண்ணீரை கடலில் வடிய விடாமல் தடுத்து, கரைப்பகுதியில் உடைப்பை ஏற்படுத்தி வருகின்றன.
எனவே மணல் திட்டை அகற்ற வேண்டும் என தினமலர் நாளிதழில் சுட்டிக்காட்டி விரிவான செய்தி வெளியிடப்பட்டது.
இதன் காரணமாக மீண்டும் தென்கரையை பலப்படுத்தவும், ஆற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு மற்றும் கருவேலங்காட்டை அழிக்கவும் தற்போது ரூ. 10 கோடிக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் துவங்கியுள்ளது.
ஆற்றின் மையப் பகுதியில் உள்ள மணல் திட்டை அகற்றி மணலை வெளியே எடுத்து செல்லாமல் ஆற்றின் கரையோரத்தில் உள்ள பள்ளமான கரை பகுதியில் கொட்டி துார்த்து, சமன் செய்து வருகின்றனர்.