/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாணவர்கள் சமுதாயத்தில் சிறக்க உதவுகிறேன் பள்ளி ஆசிரியர் பாபாஜி பெருமிதம்
/
மாணவர்கள் சமுதாயத்தில் சிறக்க உதவுகிறேன் பள்ளி ஆசிரியர் பாபாஜி பெருமிதம்
மாணவர்கள் சமுதாயத்தில் சிறக்க உதவுகிறேன் பள்ளி ஆசிரியர் பாபாஜி பெருமிதம்
மாணவர்கள் சமுதாயத்தில் சிறக்க உதவுகிறேன் பள்ளி ஆசிரியர் பாபாஜி பெருமிதம்
ADDED : டிச 14, 2025 06:20 AM

மா ணவர்கள் சமுதாயத்தில் சிறந்து விளங்கும் வகையில் அவர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதே எனது லட்சியம் என ஆசிரியர் பாபாஜி பெருமிதத்துடன் கூறினார்.
மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வேளாண்மை ஆசிரியர் பாபாஜி. இவர் கடந்த 2009ம் ஆண்டு முதல், இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
அரசு பள்ளியில் சேர்ந்த நாள் முதல், பள்ளி மாணவர்களுக்கு மேல்நிலைக்கல்விக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பும், பள்ளி அருகில் உள்ள கிராமப்புறங்களுக்கு மாலை நேரங்களில் சென்று பெண் கல்வி அவசியம், வழி காட்டுதல், சமத்துவம் கடைப்பிடித்தல் மற்றும் மாணவர்களின் எதிர்கால சமுதாய பங்குகள் பற்றி பயிற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இவர், கொரானா காலத்தில் தடுப்பூசி முகாம், காசநோய் பரிசோதனை முகாம், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு, இயற்கை வேளாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
பள்ளியின் தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் இவரிடம் பயிலும் மாணவர்கள், பயின்ற மாணவர்கள் மேற்படிப்பு முடித்ததும் அவர்கள் சமுதாயத்தில் தொண்டு செய்ய, அவர்களை ஒன்றிணைத்து இணைந்து செயல்படும் வகையில், மரக்கன்றுகள் நடுதல், விழுப்புணர்வு முகாம் ஏற்படுத்துதல் மற்றும் பொது மக்களுக்கு உதவி செய்தல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.
பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கல்வி முக்கியத்துவம், சமுதாயத்தில் நமது பங்கு குறித்த விழிப்புணர்வு வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் வழங்குகிறார்.
பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்கு வர மாணவர்களின் பெற்றோரை நேரில் சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் பள்ளிக்கு வர செய்கிறார். மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த தினசரி சிறப்பு வகுப்புகள் நடத்தி வருகிறார்.
பள்ளி வளாகத்தில் இவரது வகுப்பறை சொந்த செலவில் வண்ணம் பூசி சி.சி.டி.வி., கேமராவுடன் புரொஜக்டர் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது.
அதேபோல,பள்ளி வளாகத்தின் முன்புறமாக மண் அடித்தது, கைப்பந்து விளையாடுவதற்கு இரும்பு போஸ்ட் அமைத்தது, காய்கறி தோட்டத்திற்கு வேலி ஆகிய வசதிகள் இவர் சொந்த செலவில் செய்யப்பட்டுள்ளன.
மாணவர்கள் சத்தான உணவுகள் சாப்பிடும் வகையில், ஊட்டச்சத்து காய்கறி தோட்டம் அமைத்து பள்ளியில் இயங்கும் சத்துணவு மையத்திற்கு அறுவடை செய்யப்பட்ட காய்கறிகள் வழங்கப்படுகிறது. கற்றல் திறனை மேம்படுத்த பாடம் தொடர்பான சந்தேகங்களை வேளாண் விஞ்ஞானிகள் மூலம் ஆன்லைனில் அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்திய தேயிலை வாரியம் சீனியர் லைசன்ஸ் அதிகாரி ஜெயராமன் மூலம் காபி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பயிற்சி, சவூதி அரேபியா வேளாண் இயக்குனர் லட்சுமி நாராயணனின் காய்கறி உற்பத்தி, ஆக்சிஸ் வங்கி மேலாளர் ஜெய்சங்கரின் வேளாண் கடன் மற்றும் வேளாண் பணிகள் குறித்து பயிற்சி நடந்துள்ளது.
மேலும், சேலம் நிலம் எழிலுாட்டும் நிபுணர் கமலக்கண்ணன் மூலம் கிரிக்கெட் மைதானம் தயாரிப்பு, காகித தொழிற்சாலை மேலாளர் நடராஜன் மூலம் தமிழ்நாடு காகித தொழிற்சாலை நோக்கம் மற்றும் பணிகள், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நாராயணனின் காலநிலை தாக்கும் நோய்கள் குறித்து ஆன்லைனில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு பயிற்சி வனத்துறை சார்பில் இயற்கை வளம் குறித்த முக்கியத்தும் மற்றும் மரங்களின் பயன்கள், பயிர் பாதுகாப்பு முறை, மூலிகைச்செடிகளின் முக்கியத்துவம், கால்நடை வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு, வேளாண்மை துறையில் கணினியின் பங்கு, துாய்மை பாரத திட்டம் மூலம் இயற்கை உரம் தயாரித்தல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
களப்பயணம் விருத்தாசலம் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம், வண்டுராயன்பட்டு தமிழ்நாடு அரசு விதை உற்பத்தி நிலையம், பாலி சித்த மருத்துவக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஏற்காடு காபி வாரியம், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், பொட்டானிக்கல் சர்வே ஆப் இந்தியா, கொல்லிமலை தோட்டக்கலை பண்ணையம், முத்தாண்டிக்குப்பம் முந்திரி தரம் பிரித்தல் மற்றும் ஏற்றுமதி நிலையம், பாலுார் காய்கறி ஆராய்ச்சி நிலையம், கங்கைகொண்டசோழபுரம் தமிழ்நாடு காகித தொ ழிற்சாலை நாற்றாங்கால் பண்ணை ஆகியவற்றுக்கு மாணவர்களை நேரில் அழைத்துச் சென்று களப்பயணம் மூலம் புரிதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து ஆசிரியர் பாபாஜி கூறியதாவது:
பள்ளி மற்றும் கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்து கண் சிகிச்சை முகாம், கால்நடை முகாம், பட்டுப்புழு வளர்ப்பு, மகளிர் சுய வேலைவாய்ப்பு பயிற்சி போன்றவற்றை நடத்தி வருகிறேன்.
கடந்த, 2010 - 11ல் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் முதன்மை பரிசு பெற்றதற்கான சிறந்த வழிகாட்டி ஆசிரியருக்கான விருது, கடந்த, 2017ல் கடலுார் சி.இ.ஓ.,விடம் 100 சதவீத தேர்ச்சிக்கான விருது, கடந்த 2020ம் ஆண்டில் அரிமா சங்கம் சார்பில் சிறந்த நல்லாசிரியர் விருது, 2020ல் மக்கள் சேவகர் விருது பெற்றுள்ளேன்.
கொரோனா கால கட்டத்தில் தடுப்பு பகுதி மற்றும் தற்காலிக மருத்துவமனையில் பணிபுரிந்ததை பாராட்டி கலெக்டரிடம் விருது, 2021,ல், 75வது சுதந்திர தின விழாவில் கலெக்டரிடம் சிறந்த ஆசிரியர் விருது, வசந்த் டி.வி., வேந்தன் டி.வி.,க்களில் நல்லாசிரியர் விருதுகள், திருச்சி, தமிழ்நாடு பண்பாட்டுக் கழகத்தின் நல்லாசிரியர் விருது, மனித உரிமை கழக நல்லாசிரியர் விருது, சட்ட விழிப்புணர்வு அமைப்பின் நல்லாசிரிர் விருது, வளரிளம் பருவ கல்வித் திட்டத்தின் சான்றிதழ் என பல்வேறு விருதுகளும், சான்றுகளும் பெற்றுள்ளேன். மேலும், வேளாண் பெட்டகம், மூலிகை பெட்டகம், பயோபியூல்ஸ் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளேன்.
ஆரோக்கியமான, வளமான, சமத்துவமான, அமைதியான, நேர்மையான, சுதந்திரமான, பொருப்புணர்வோடு, ஒழுக்கமான மாணவர்களை உருவாக்க கல்வி, விளையாட்டுடன் பொறுப்புள்ள தொலைநோக்கு பார்வையுடன் எதிர்கால பாரதத்தின் வளர்ச்சியும், உலக நாடுகளில் நமது நாடு மேல்நோக்கி இருக்க கருத்தில் கொண்டு மாணவர்களை உருவாக்கி கொண்டு வருகின்றேன்.
எந்த சூழலிலும் திறன்பட செயல்பட்டு அனைத்து துறைகளிலும் புதிய ஒரு விடியல், எழுச்சியுடன் ஒளிமயமான உலகத்தை உருவாக்கவும், மக்களை பாதுகாக்கவும் மாணவர்களை பண்பு மிக்கவராக வளர்த்து வருகிறேன்.
கல்வி மட்டுமின்றி, மக்களின் நலனுக்காக இயற்கை வளங்களை காக்கவும், மனித வாழ்க்கை முன்னேற்றம் அடையும் வகையில், அனைத்து ஜீவராசிகளையும் பாதுகாக்கவும், மாணவர்களுக்கு தேவையான அனுபவ கல்வி, பிறப்பின் அர்த்தத்தை தெரிந்து கொள்ளும் வகையில் என் பணியினை செய்து வருகின்றேன்.
எனது பள்ளியில் பயின்ற மாணவர், பிற பள்ளியில் பயின்றாலும், என்னுடன் தொடர்புடைய மாணவர்களுக்கு மேல்நிலைக் கல்வி வழிகாட்டி, வேலைவாய்ப்பு, சுயதொழில் மற்றும் முன்னாள் மாணவர்கள் உடன் சேர்ந்து ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், வறுமை நிலைக்கு கீழ் உள்ளவர்களுக்கு உணவு, அடிப்படை உதவிகளை செய்து வருகின்றேன்.
மேலும் பேரிடர் மேலாண்மையின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்கள் இயல்பான நிலைமை திரும்ப அவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ உதவிகள், கல்வி பயில உதவிகள் போன்றவை செய்து வருகின்றேன்.
சமுதாயத்தில் சிறந்து விளங்கும் வகையில் மாணவர்களை உருவாக்கி வருகிறேன்; இதுவே எனது வாழ்நாள் லட்சியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

