ADDED : ஏப் 24, 2026 07:48 PM

விருத்தாசலம்: திட்டக்குடி, விருத்தாசலம் தொகுதிகளின் ஓட்டு எண்ணும் மையமான கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
விருத்தாசலம் தொகுதியில் 1,18,319 ஆண் வாக்காளர்கள், 1,19,495 பெண் வாக்காளர்கள், 22 திருநங்கைகள் உட்பட 2,37,836 வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டனர். அவர்களின் வசதிக்கேற்ப 288 ஓட்டுச்சாவடிகள், 317 ஓட்டுச்சாவடிகளாக மாற்றம் செய்யப்பட்டன.
விருத்தாசலம் தொகுதியில், 18 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், கூடுதலாக ஒரு ஓட்டுப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்பட்டது. இதற்காக, மேலும் 380 இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, நேற்று பயன்படுத்தப்பட்டன.
அதுபோல், திட்டக்குடி தனி தொகுதியில் 1,01,774 ஆண் வாக்காளர்கள், 1,04,992 பெண் வாக்காளர்கள், திருநங்கைகள் 4 பேர் உட்பட 2,06,770 வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டன. மேலும், 279 ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு செய்தனர்.
ஓட்டுப்பதிவு முடிந்ததும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் விருத்தாசலம், திட்டக்குடி தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன.
மேலும், துணை ராணுவப்படை வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீசார் என மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, கல்லுாரி வளாகம் முழுவதும் சிசிடிவி., கண்காணிப்பு கேமரா மூலம் கண்காணிக்கப்படுகிறது.
