தென்பெண்ணையாற்றில் ரூ.57 கோடியில் பணிகள் தீவிரம்: இனி கடலோர கிராமங்கள் பாதுகாக்கப்படும்
தென்பெண்ணையாற்றில் ரூ.57 கோடியில் பணிகள் தீவிரம்: இனி கடலோர கிராமங்கள் பாதுகாக்கப்படும்
UPDATED : ஆக 07, 2026 07:54 PM
ADDED : ஆக 07, 2026 07:53 PM
கடலுார்: கடலுார் தென்பெண்ணையாற்றில் 57 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது ஆற்றின் கரைகள் உடைப்பெடுத்து அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில் தண்ணீர் புகுந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தியது.
அதனால் பெரும்பாலான ஆறுகளின் கரைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. மேற்கே பெய்து வரும் மழை மற்றும் வெள்ளநீர் கடலுார் மாவட்டத்தின் வழியாக ஓடி வங்கக்கடலில் வடிகிறது.
தற்போது கால சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அதிக வெயில், அதிக மழை, அதிக வெள்ளம் என்கிற நிலைமை உள்ளது.
எனவே வெள்ள காலங்களில் கடலுார் மாவட்டத்திற்குள் பாயும் பெண்ணையாற்று கரைகள் உடைந்து அருகில் உள்ள கிராமங்களில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.
குறிப்பாக கடலோர பகுதியில் உள்ள நாணமேடு, உச்சிமேடு, கண்டக்காடு, குண்டு உப்பலவாடி, தாழங்குடா, சுபா உப்பலவாடி, தியாகுநகர், சின்ன கங்கணாங்குப்பம், பெரிய கங்கணாங்குப்பம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன.
இந்நிலையில், பெண்ணையாற்றின் வடக்கு கரையான பெரிய கங்கணாங்குப்பம் பாலத்தில் இருந்து கடல் பகுதி வரை, 5.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கரைகளை பலப்படுத்தும் பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
2 வது கட்டமாக பெண்ணையாற்று பாலத்தில் துவங்கி, குண்டு உப்பலவாடி வரை தென்கரை முழுவதும் சீரமைக்க 9.90 கோடி ரூபாய், நிதி ஒதுக்கி பணிகள் நடந்து வந்தன. இந்த பணி முழுமையாக நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்பட்டது.
இதையடுத்து கடந்த தி.மு.க., ஆட்சியில், அப்போதைய முதல்வர் ஸ்டாலின் 57 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த பணி குண்டுசாலையில் இருந்து கடற்கரை வரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தண்ணீர் வேகம் அதிகம் உள்ள இடங்களில் கருங்கற்களால் சாய்தள சுவர்கள், சாதாரண இடங்களில் மண்ணாலான கரைகள் பலப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக கண்டக்காடு பகுதி ஆற்றில் அதிகளவு ஆழம் இருப்பதால் வரும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள கரையை பெயர்த்து விடுகிறது.
இதனால் தண்ணீர் ஊருக்குள் சென்று பெரும் சேதத்தை உருவாக்குகிறது. மண் அரிப்பை தடுக்கும் பொருட்டு கருங்கற்களால் படிப்படியாக இரும்பு வலைக்குள் அடுக்கப்படுகிறது.
இந்த பணியினால் பெண்ணையாற்று நீர் சிறிதளமும் கிராமங்களுக்குள் நுழைவது கடினம் என்பதால் கண்டக்காடு கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
