/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்
/
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்
நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் பாதசாரிகளுக்கு விபத்து அபாயம்
ADDED : நவ 16, 2024 02:35 AM

விருத்தாசலம்: மணிமுக்தாறு மேம்பாலத்தின் இருபுறம் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானா - கடைவீதி இடையே செல்லும் மணிமுக்தாறு மேம்பாலம் வழியாக திருச்சி, பெரம்பலுார், சேலம், கள்ளக்குறிச்சி, ஜெயங்கொண்டம், அரியலுார், கும்பகோணம் மார்க்கமாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. விருத்தகிரீஸ்வரர் கோவில் மற்றும் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு பொது மக்கள் நடந்து சென்று வருகின்றனர். பாதசாரிகள் நலனுக்காக பாலத்தின் இருபுறம் போடப்பட்ட நடைபாதையில் பொது மக்கள் சிரமமின்றி சென்றனர்.
இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து காய்கறி, பழங்கள், ரெடிமேட் துணிகள், போர்வைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்வதால் பாதசாரிகள் சாலையில் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிவேகமாக வரும் வாகனங்களில் சிக்கி காயமடைகின்றனர்.
மேலும், பொருட்களை வாங்க வருவோரின் இருசக்கர வாகனங்கள் மேம்பாலத்தில் ஆங்காங்கே நிறுத்துவதால், வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகும்போது, அதிகாரிகள் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றுவதும், ஓரிரு நாட்களில் மீண்டும் நடைபாதையில் ஆக்கிரமிப்பு முளைப்பதும் தொடர்கிறது.
எனவே, நடைபாதையில் வியாபாரம் செய்வோரை உழவர் சந்தைக்குள் கொண்டு வரவும், மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.