/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலி சான்றிதழ் தயாரித்த சித்த மருத்துவர் கைது
/
போலி சான்றிதழ் தயாரித்த சித்த மருத்துவர் கைது
ADDED : செப் 24, 2024 10:31 PM

கடலுார்:சிதம்பரத்தில் போலி சான்றிதழ் தயாரித்த வழக்கில், திருச்சியைச் சேர்ந்த போலி சித்த மருத்துவரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகே, ஜூன் 19ல் அண்ணாமலை பல்கலை பெயரில் போலி சான்றிதழ்கள் கிடந்தன. இதுகுறித்து பல்கலை பதிவாளர் பிரபாகர், போலீசில் புகார் அளித்தார்.
கிள்ளை போலீசார் விசாரித்தனர். சிதம்பரம் மன்மதசாமி நகரைச் சேர்ந்த சங்கர், 37, கிருஷ்ணமூர்த்தி நகரைச் சேர்ந்த நாகப்பன், 50, அருட்பிரகாசம் ஆகியோர், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, டிகிரி, சித்தா படிப்பு ஆகிய சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்றது விசாரணையில் தெரிந்தது.
மூவரையும் கைது செய்து, போலி சான்றிதழ்கள், அதை தயாரிக்க பயன்படுத்திய லேப் டாப், பிரின்டர் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது.
கடலுார் சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர். தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில், போலி சான்றிதழ்கள் மூலம் ஏராளமானோர் சித்த மருத்துவம் பார்த்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், 100 பேருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பியதில், 50 பேர் ஆஜராகி, தங்களின் சான்றிதழ்களை போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சியைச் சேர்ந்த சித்த வைத்தியரும், அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவருமான சுப்பையா பாண்டியன், 67, என்பவர், போலி சான்றிதழ் விற்றது தெரிய வந்தது.
மேலும், சிதம்பரத்தைச் சேர்ந்த தற்போது புதுச்சேரியில் வசித்து வரும் ஒஸ்டின் ராஜா என்பவரிடம் போலி சான்றிதழ்களை வாங்கி விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்தது.
இதற்காக மாதந்தோறும் திருச்சியில் கூட்டம் நடத்தி, ஏஜென்டுகள் மூலம் 5,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை போலி சான்றிதழ்களை விற்பனை செய்துள்ளனர்.
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன் தினம் அதிகாலை திருச்சி சென்றனர். சுப்பையா பாண்டியனை அவரது விட்டில் கைது செய்தனர். வீடு மற்றும் மருத்துவமனைகளில் சோதனை நடத்தினர்.
சுப்பையா பாண்டியன் மற்றும் அவரது மனைவி சான்றிதழும் போலி என்பது தெரிய வந்தது. கடலுாருக்கு அழைத்து வரப்பட்ட சுப்பையா பாண்டியனிடம் தீவிர விசாரணை நடக்கிறது.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா, கர்நாடகா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களிலும் போலி சான்றிதழ் விற்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தலைமறைவாக உள்ள ஒஸ்டின் ராஜாவை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருகின்றனர்.