/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டூ - வீலர் மீது பள்ளி பஸ் மோதி மகன், மகள் பலி; தாய் சீரியஸ்
/
டூ - வீலர் மீது பள்ளி பஸ் மோதி மகன், மகள் பலி; தாய் சீரியஸ்
டூ - வீலர் மீது பள்ளி பஸ் மோதி மகன், மகள் பலி; தாய் சீரியஸ்
டூ - வீலர் மீது பள்ளி பஸ் மோதி மகன், மகள் பலி; தாய் சீரியஸ்
ADDED : டிச 17, 2024 07:17 AM

நெய்வேலி; கடலுார் மாவட்டம், நெய்வேலி அருகே வடக்குத்து கே.எஸ்.கே.நகரை சேர்ந்தவர் ஜான் சின்னப்பராஜ், 45; ஸ்டூடியோ வைத்துள்ளார். இவரது மனைவி சிலம்பரசி, 35. இவர்களின் மகன்கள் டேவிட்ராஜ், 12. கிறிஸ்துவராஜ், 10, மகள் ஜாஸ்விகா, 5; நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள பள்ளிகளில் படித்து வந்தனர்.
சிலம்பரசி தன் மூன்று குழந்தைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு, பள்ளியில் விட நேற்று காலை சென்றார். வட்டம் 9ல் உள்ள பள்ளியில் கிறிஸ்துவராஜை இறக்கி விட்டு, டேவிட்ராஜ் மற்றும் ஜாஸ்விகாவுடன் வட்டம் 29ஐ நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அங்குள்ள பாரதி சாலையில் சென்றபோது, எதிரே வேகமாக வந்த தனியார் பள்ளி பஸ் மோதியதில் மூவரும் துாக்கி வீசப்பட்டனர்.
படுகாயமடைந்த அவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு என்.எல்.சி., மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஜாஸ்விகா இறந்தார்.
சிலம்பரசி, டேவிட்ராஜை, மேல் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் டேவிட்ராஜ் உயிரிழந்தான். சிலம்பரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சுதாகர் வழக்கு பதிந்து, தப்பியோடிய பஸ் டிரைவரை தேடி வருகிறார்.

