/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
/
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
ADDED : ஏப் 18, 2025 02:20 AM

விருத்தாசலம்:விருத்தாசலம் அருகே தந்தையின் இறுதிச்சடங்கில், மகன் காதலித்த பெண்ணை திருமணம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த கவணை கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மனைவி கண்ணம்மாள். இவர்களது இரண்டாவது மகன் அப்பு. சட்டப்படிப்பு பயின்று வழக்கறிஞராக பணிபுரிய பதிவு செய்துள்ளார்.
இவரும், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவி விஜயசாந்தி என்பவரும் 4 ஆண்டுகளாக காதலித்தனர். இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய காத்திந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக செல்வராஜ் நேற்று முன்தினம் இறந்தார்.
நேற்று மாலை 4:00 மணிக்கு, அவரது வீட்டில் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடந்தது. அப்போது, காதலியை அழைத்து வந்த அப்பு, தந்தையின் இறுதிச்சடங்கில், அவரது கைகளால் தாலியை எடுத்து கொடுக்க வைத்து, திருமணம் செய்து கொண்டார்.
துக்க நிகழ்விலும், அவரது தாய், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அனைவரும் மணமக்களுக்கு ஆசி வழங்கினர். பெண்ணின் உறவினர்களுக்கு உடன்பாடு இல்லாததால், திருமணத்தில் பங்கேற்கவில்லை. பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ள நினைத்த மகன், தந்தையின் சடலம் முன் காதலித்த பெண்ணை கரம்பிடித்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

