கற்றல் கொண்டாட்ட திட்டத்தில் விளையாட்டு பயிற்சி துவக்கம்
கற்றல் கொண்டாட்ட திட்டத்தில் விளையாட்டு பயிற்சி துவக்கம்
UPDATED : ஆக 19, 2026 06:42 PM
ADDED : ஆக 19, 2026 06:30 PM
கடலுார்:கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி வகுப்புகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் நலம் கருதி கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் டென்னிஸ், பேட்மிண்டன், ஆங்கில மொழி பேச்சுப் பயிற்சி, நீச்சல், சதுரங்கம், சறுக்கு விளையாட்டு, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி ஆகிய சிறப்பு பயிற்சி வகுப்புகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தொடங்கி வைத்து கூறியதாவது:
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும், வகுப்பறை கற்றலுக்கு அப்பால் சென்று மாணவர்கள் தங்கள் ஆர்வங்கள், திறமைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேன்மைப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்கும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோடை விடுமுறையில் அரசு பள்ளி மாணாக்கர்களுக்காக “கோடையில் கற்றல் கொண்டாட்டம்“ என்ற சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.கங்கணாங்குப்பம் அரசு பள்ளியில் பேட்மிண்டன், டென்னிஸ், மாணவர்கள் உயர்கல்வி பயிலும்போது எவ்வித தயக்கமும், அச்சமுமின்றி ஆங்கிலத்தில் பேசி, பயில வேண்டும் என்பதற்காக வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில மொழி பேச்சு பயிற்சி, மாணவர்கள் தங்களது தனித்திறன்களை வளர்க்கும் நோக்கில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நீச்சல் பயிற்சி, புதுப்பாளையம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் சதுரங்க விளையாட்டு பயிற்சி, செல்லங்குப்பம் சி.கே சி.பி.எஸ்.இ., பள்ளியில் சறுக்கு விளையாட்டு, தேசிய வருவாய் வழி திறன் தேர்வு பயிற்சி போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இப்பயிற்சி வகுப்புகள் மூலம் 5,850 மாணவ, மாணவிகள் பயனடைவர்.
ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்திறன் ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பயிற்சி வகுப்புகள் பள்ளி முடிந்த பிறகு , வார விடுமுறை நாட்களில் நடத்தப்படுவதால் மாணவர்களின் கற்றலுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது. இது போன்ற பயிற்சி வகுப்புகளை பயன்படுத்தி தங்களது திறன்களை மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில், மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
