நீலக்கொடி சான்றிதழுக்கு இடம் அளவீடு செய்யும் பணி துவக்கம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சிறப்பு திட்டம்
நீலக்கொடி சான்றிதழுக்கு இடம் அளவீடு செய்யும் பணி துவக்கம்: சுற்றுலா பயணிகளை ஈர்க்க அரசின் சிறப்பு திட்டம்
UPDATED : ஆக 10, 2026 03:32 PM
ADDED : ஆக 10, 2026 03:30 PM

புதுச்சத்திரம்: சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக் கொடி சான்றிதழ் பெறுவதற்கு, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள இடம் அளவீடு செய்யும் பணி,துவங்கி நடந்து வருகிறது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சிலம்பிமங்களம் ஊராட்சிக்குட்பட்ட சாமியார்பேட்டை கடற்கரையில், சிதம்பரம், புவனகிரி பிள்ளை புதுச்சத்திரம், குள்ளஞ்சாவடி, பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் விடுமுறை தினங்களில், இந்த கடற்கரைக்கு பொழுதுபோக்கிற்காக வந்து செல்வது வழக்கம்.
அதையொட்டி சாமியார்பேட்டை ஊராட்சி மற்றும் கிராம நிர்வாகம் சார்பில், சாமியார்பேட்டை கடற்கரையை சுற்றுலாத் தளமாக அறிவிக்க வேண்டுமென, பல்வேறு கோரிக்கை மனுக்கள் அரசிடம் அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலாத் துறையினர் ஆய்வு செய்து, சுற்றுலாத் தளமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த 2025 - 26 பட்ஜெட் தாக்கலின்போது, தமிழ்நாட்டில் ஆறு கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெறமுயற்சி எடுக்கப்படுமென, தமிழக அரசு அறிவித்தது. அதில் திருவான்மியூர், பாலவாக்கம், சென்னையில் உள்ள உத்தண்டி, தூத்துக்குடி குலசேகரப்பட்டினம் கடற்கரை, விழுப்புரத்தில் உள்ள கீழ்புதுப்பட்டு கடற்கரை, கடலூர் மாவட்டத்தில் சாமியார்பேட்டை கடற்கரை ஆகிய கடற்கரைகளுக்கு 24 கோடி ரூபாய் செலவில், நீலக்கோடி சான்றிதழ் பெறுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்க உள்ளதாக அறிவித்தது.
உலக அளவில் இதுவரை 4154 கடற்கரைகள் நீலக்கொடி சான்றிதழ் பெற்றுள்ளன. இதற்கு முன் ஒடிசாவில் உள்ள கோல்டன் கடற்கரை, குஜராத்தில் உள்ள சிவராஜ் போர்ட் கடற்கரை, புதுச்சேரியில் உள்ள ஈடன் கடற்கரை மற்றும் கோவளம் உள்ளிட்ட கடற்கரைகள், நீலக்கொடி சான்றிதழை பெற்றுள்ளன.
நீலக்கொடி சான்றிதழ் சுற்றுலா மேலாண்மை, சுத்தமான மணல், சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள், ஆண்கள், பெண்களுக்கான தனி கழிவறைகள், குளிப்பதற்கு தகுந்த சுகாதாரமான நீர், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, முதலுதவி சிகிச்சை மையம், சிறுவர் பூங்கா, பார்க்கிங் வசதி உள்ளிட்ட 33 அம்சங்களை மையமாக வைத்து, நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இந்த சான்றிதழ் பெறப்பட்டிருக்கும் கடற்கரை, பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான கடற்கரை என்ற தகுதியை கொண்டிருப்பதாகவும் இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில், அழகிய கடற்கரையாக இருக்கும் கடற்கரை ஆய்வு செய்து, டென்மார்க்கை சேர்ந்த சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை நிறுவனம் சார்பில், நீலக்கொடி சான்றிதழ் வழங்கப்படுகிறது. கடற்கரைக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பெரும்பால நாடுகள் நீலக்கொடி சான்றிதழ்பெற, முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
எனவே சாமியார்பேட்டை கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு, கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள, 30 ஆயிரம் சதுரஅடி முதல் 40 ஆயிரம் சதுர அடி அளவிற்கு, கடற்கரையை அளவிட செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது. விரைவில் கட்டமைப்பு பணிகள் துவங்கி நடைபெற உள்ளது.
