கடலுார் மைதானத்தில் கட்டுமானப்பணி மீண்டும் துவங்கியது: இனி கட்டடம் கட்டக்கூடாது என கோர்ட் திட்டவட்டம்
கடலுார் மைதானத்தில் கட்டுமானப்பணி மீண்டும் துவங்கியது: இனி கட்டடம் கட்டக்கூடாது என கோர்ட் திட்டவட்டம்
UPDATED : செப் 02, 2026 11:07 PM
ADDED : செப் 02, 2026 09:12 PM

கடலுார்:கடலுார் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 110 கடைகள் கட்டுமான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ள ஐகோர்ட் அனுமதி வழங்கியதை தொடர்ந்து கடைகள் கட்டும் பணி மீண்டும் துவங்கியுள்ளது.
கடலுார் மாநகராட்சியில் வருவாயை பெருக்குவதற்காக ரூ.14.15 கோடி மதிப்பில் மைதானத்தை சுற்றிலும் 110 கடைகள் கட்ட மாநகராட்சி முடிவு செய்து கட்டுமானப்பணிக்கு டெண்டர் விடப்பட்டது. மாநகராட்சியின் இச்செயலுக்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மாலை நேரத்தில் வயோதிகர்கள் காற்றோட்டமாக கூடி பேசி மகிழும் மைதானத்தை சுற்றிலும் கடைகள் கட்டுவதால் இயற்கையான காற்று வர வழியில்லை. எனவே மரங்களை வெட்டக்கூடாது எனவும், மைதானம் விளையாட்டு மற்றும் பொதுப் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு வணிக வளாகம் அமைப்பதால் மைதானத்தின் பயன்பாடு பாதிக்கப்படும். எனவே புதிய கடைகள் கட்டக்கூடாது என இந்தத் திட்டத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
அதன் விளைவாக மைதானத்தில் கடைகள் கட்ட ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு வழங்கியது. அதன் பின்னர் வழக்கு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
ஐகோர்ட்டில் மாநகராட்சி விளக்கம்: மொத்தம் 15 ஏக்கர் பரப்பளவில் 4 சதவீத இடம் மட்டுமே கடைகளுக்காக பயன்படுத்தப்படுவதாக மாநகராட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், கட்டுமானப் பணிகள் ஏற்கனவே 50 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், கடைகள் மைதானத்தின் சுற்றுச்சுவர் போன்று அமையும் என்றும், இதனால், மைதானத்தின் விளையாட்டு நடவடிக்கைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஐகோர்ட் தீர்ப்பு
அதையொட்டி கட்டுமானப்பணி பாதியில் நிற்கும் கடைகள் மீண்டும் கட்டிக்கொள்ளலாம். மேற்கொண்டு எந்தவித கட்டுமானப்பணியும் செய்யக்கூடாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது.
மஞ்சக்குப்பம் மைதானத்தில் திட்டமிடப்பட்டுள்ள 110 கடைகள் தொடர்பான கட்டுமானப் பணிகளுக்கு சட்டரீதியான அனுமதி கிடைத்துள்ள நிலையில், மீதமுள்ள நிலம் எதிர்கால கட்டுமானங்களிலிருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது.
ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம், மைதானத்தில் பாதியில் விடப்பட்ட கட்டுமான பணிகளை மீண்டும் துவங்கியுள்ளது. மேலும், இப்பணிகளை விரைந்து முடிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
