/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
/
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: மாவட்டத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்
ADDED : நவ 28, 2024 07:04 AM

கடலுார் வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் புயல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகன காற்றழுத்த தாழ்வுமண்டலம் காரணமாக, கடலுார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலான மழை பெய்து வருகிறது. நேற்று இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையினால் வடக்குத்தில் அதிகபட்சமாக 108 மி.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர் மழை காரணமாக நேற்று மாவட்டத்தில் பள்ளி கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஆலப்பாக்கம், ஆணையம்பேட்டை, குமராட்சி உள்ளிட்ட இடங்களில் நெல் வயல் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று காலை 8:30 வரையில், அதிகபட்சமாக வடக்குத்தில் 108 மி.மீ., பதிவாகியுள்ளது.
மேலும் கலெக்டர் அலுவலகம் 97.6, கடலுார் 97, அண்ணாமலைநகர் 76.2, வானமாதேவி 68, பரங்கிப்பேட்டை 68, சிதம்பரம் 63.2, காட்டுமன்னார்கோவில் 61.4, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி 56, லால்பேட்டை 52.8, ஸ்ரீமுஷ்ணம் 51.3, பண்ருட்டி 50, சேத்தியாதோப்பு 49.6, புவனகிரி 49, கொத்தவாச்சேரி 44, குறிஞ்சிப்பாடி 39, குப்பனத்தம்38.2, விருத்தாசலம் 36, மேமாத்துார் 34, வேப்பூர் 33, பெலாந்துறை 31.3, கீழ்செருவாய் 30.6, காட்டுமயிலுார் 30, லக்கூர் 28, தொழுதுார் 25 மி.மீ., மழை பெய்துள்ளது.
மாவட்டம் முழுவதும் நேற்று தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்தது, கடல் சீற்றமாக காணப்பட்டது. கடல் அலை 5 அடி உயரம் வரையில் எழும்பியது. கடல் அருகே செல்லவும், குளிக்கவும், தடை விதித்து, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
படகுகள் பாதுகாப்பாக நிறுத்தம்
முதுநகர் சித்திரைப்பேட்டை பகுதியில் மாலை கடல் சீற்றத்தினால், கடல் நீர் கரையை உடைத்துக்கொண்டு வெளியேறி வருகிறது. இதனால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் கடல் பகுதிக்கு அப்பால் டிராக்டர் மூலம் இழுத்துச்செல்லப்பட்டு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
வீடுகள் சேதம்
கடலுார் மாவட்டத்தில் பரவலான மழை பெய்தாலும், கடலுார், வடக்குத்து ஆகிய பகுதிகளில்தான் அதிகளவு மழை பதிவாகியுள்ளது. இதன்காரணமாக ஆலப்பாக்கம், பூண்டியாங்குப்பம், குமராட்சி, வடலுார், குறிஞ்சிப்பாடி பகுதிகளில் மழைநீரால் நெல் வயல் மூழ்கியுள்ளது.
திட்டக்குடி பகுதியில் 1 வீடும், சி.என்.பாளையத்தில் 2 வீடுகளும் மழையால் சேதமடைந்துள்ளன. அதேபோல் சிதம்பரத்தில் 2 கால்நடைகள், ஸ்ரீமுஷ்ணம், விருத்தாசலத்தில் தலா ஒரு மாடும் இறந்துள்ளன.
முன்னெச்சரிக்கை தீவிரம்
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ஏற்கனவே, பாதிப்பு பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டுள்ளனர். அதே போன்று, தீயணைப்பு வீரர்களும் உபகரணங்களுடன் தயார் நியைலில்உள்ளனர்.