/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தரமற்ற பருத்தி விதைகள்: விருதையில் பறிமுதல்
/
தரமற்ற பருத்தி விதைகள்: விருதையில் பறிமுதல்
ADDED : ஆக 10, 2025 02:26 AM

கடலுார் : விருத்தாசலம் பகுதி விதை விற்பனை நிலையங்களில் தரமற்ற 6,492 கிலோ மக்காச்சோளம், பருத்தி விதைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
விருத்தாசலம் அடுத்த மங்களூர், நல்லுார், வேப்பூர், தொழுதுார் மற்றும் ஆவட்டி பகுதிகளில் தனியார் விதை, பூச்சி மருந்து விற்பனை நிலையங்களில் விழுப்புரம் விதை ஆய்வு துணை இயக்குனர் சரவணன் தலைமையில் கடலுார், விருத்தாசலம் விதை ஆய்வாளர்கள் ஜோதிமணி, நடராஜன், செந்தில்குமார், தமிழ்பிரியன் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு செய்தனர்.
இக்குழுவினர் 15 கடைகளில் விதை கொள்முதல் ஆவணங்கள், விற்பனை பட்டியல், தனியார் விதைகளுக்கான பதிவுச்சான்றுகள், விதை பகுப்பாய்வு முடிவு அறிக்கைகள், விதை இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
விதைகள் விற்பனை செய்யும் போது ரசீதில் காலாவதி நாள் குறிப்பிட வேண்டும். பருவ காலத்திற்கு ஏற்ற ரக விதைகள் விற்பனை செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினர்.
விதை விற்பனை கடைகளில் மக்காச்சோளம், பருத்தி விதைகளில் இருந்து 18 விதை மாதிரிகள் சேகரித்து, தரம் உறுதி செய்ய, கடலுார் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விதை குவியல் பதிவுச்சான்று, முளைப்புத்திறன் பரிசோதனை அறிக்கை, விதைச் சான்று ஆகியவை பராமரிக்காத சில விற்பனை நிலையங்களில் இருந்து ரூ.31,09,236 மதிப்பில் 6,492 கிலோ மக்காச்சோளம், பருத்தி விதைகள் விற்பனைக்கு தடை செய்து பறிமுதல் செய்தனர்.