/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் புறநகர் பஸ் நிலையம் தேவை! இட நெருக்கடியால் பயணிகள் தவிப்பு
/
விருத்தாசலத்தில் புறநகர் பஸ் நிலையம் தேவை! இட நெருக்கடியால் பயணிகள் தவிப்பு
விருத்தாசலத்தில் புறநகர் பஸ் நிலையம் தேவை! இட நெருக்கடியால் பயணிகள் தவிப்பு
விருத்தாசலத்தில் புறநகர் பஸ் நிலையம் தேவை! இட நெருக்கடியால் பயணிகள் தவிப்பு
ADDED : ஜன 03, 2024 12:37 AM
விருத்தாசலம் : விருத்தாசலத்திற்கு பஸ்களின் வருகை அதிகரித்துள்ளதால் பயணிகள் மற்றும் பஸ் டிரைவர், கண்டக்டர்கள் நலன் கருதி, புறநகர் பஸ் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார் மாவட்டத்தில் முக்கிய நகரமாக விருத்தாசலம் உள்ளது. இங்கு ஆர்.டி.ஓ., அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகம், சார் கருவூலம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லுாரிகள், கல்வியியல் கல்லுாரிகள், செவிலியர் பயிற்சி கல்லுாரிகள், ஐ.டி.ஐ., அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மண்டல ஆராய்ச்சி நிலையம், வேளாண் அறிவியல் நிலையம், அரசு தோட்டக்கலை பண்ணை, கோவில்கள், செராமிக் தொழிற்பேட்டை, பெருவணிக நிறுவனங்கள் என, ஏராளமாக உள்ளது.
இதனால் அன்றாட தேவைக்கு சுற்றியுள்ள 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மற்றும் மாவட்ட எல்லையை ஒட்டிய அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த கிராம மக்களும் தினசரி விருத்தாசலம் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
விருத்தாசலத்தில் உள்ள இரண்டு, அரசு போக்குவரத்து பணிமனைகளில் இருந்து தினசரி 150க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள், நெடுந்துார பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதன் மூலம் விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு தினசரி 300க்கும் அதிகமான பஸ்கள் வந்து செல்கின்றன.
மேலும், சென்னை, சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற பிற மாவட்டங்களுக்கும், கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கும் இங்கிருந்து பஸ் வசதி உள்ளன.
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், அப்போதைய மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, ஜங்ஷன் சாலையில் பஸ் நிலையம் கட்டப்பட்டது.
நாளடைவில் மக்கள் தொகை பலமடங்கு பெருக்கமடைந்தும் பஸ் நிலையம் விரிவுபடுத்தப்படவில்லை. குடிநீர், இருக்கை வசதிகள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு ஓய்வறைகள் இல்லை.
மேலும், பஸ்கள் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாமல், பஸ்களை தாறுமாறாக நிறுத்தும் அவலம் தொடர்கிறது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று, கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், செராமிக் தொழிற்பேட்டை வளாகம் மற்றும் கடலுார் சாலையிலும் புறநகர் பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி நடந்தது. ஆட்சி மாற்றம் காரணமாக புறநகர் பஸ் நிலையம் அமைக்கும் பணி தொடர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல், இட நெருக்கடியில் பயணிகள் தவிக்கும் நிலை தொடர்கிறது.
பழைய பஸ் நிலையத்தில் டவுன் பஸ்களும், புறநகர் பஸ் நிலையத்தில் பிற மாவட்ட, நெடுந்துார பஸ்கள் வந்து செல்ல நடவடிக்கை எடுத்தால், நெரிசலான ஜங்ஷன் சாலையில் வாகன நெரிசல் குறைந்து, விபத்துகள் தடுக்கப்படும். மேலும், நகராட்சி நிர்வாகத்துக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்.
எனவே, விருத்தாசலத்தில் புறநகர் பஸ் நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.