ADDED : ஜன 15, 2024 06:34 AM

நடுவீரப்பட்டு : பத்திரக்கோட்டை பகுதியில் பயிரிடப்பட்ட கரும்புகள் முழுமையாக விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை, சிலம்பிநாதன்பேட்டை, சத்திரம், குமளங்குளம், வேகாக்கொல்லை உள்ளிட்ட பல பகுதிகளில் பொங்கல் பண்டிகைக்காக பன்னீர் கரும்புகள் பயரிடப்பட்டிருந்தன.
தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைகளுக்கும் ஒரு முழு கரும்பு வழங்கிட உத்தரவிட்டது.
அதனடிப்படையில் கூட்டுறவுத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கரும்புகளை தானே முன்னின்று கொள்முதல் செய்தனர். அரசு கரும்பு கொள்முதல் செய்ய ஒரு கரும்புக்கு வண்டி வாடகையுடன் ரூ.33 ஒதுக்கீடு செய்தது.
ஆனால் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் ஒரு கரும்பு 15 முதல் 19 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்தனர்.
இதனிடையே கடந்த இரண்டு தினங்களாக சுற்று பகுதி மாவட்டங்களை சேர்ந்த தனியார் வியாபாரிகள் ஒரு கரும்பு 20 ரூபாய்க்கு வாங்கி செல்கின்றனர்.
அரசு அதிகாரிகளை விட தனியார் வியாபாரிகள் அதிக விலைக்கு கரும்புகளை வாங்கி செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.