ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து.. ஆய்வு!தொகுதி வாரியாக மண்டல அலுவலர்கள் நியமனம்
ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து.. ஆய்வு!தொகுதி வாரியாக மண்டல அலுவலர்கள் நியமனம்
ADDED : பிப் 23, 2026 03:15 AM

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடாக ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள் குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைக்க பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றன.
குறிப்பாக, கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு, வேட்பாளர் நேர்காணல், பிரசாரம் என, தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுவதால் தேர்தல் களம் சூடுபிடிக்க துவங்கியுள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்படி தமிழகத்தில் மாநில தேர்தல் ஆணையம் சட்டசபை தேர்தலுக்காக விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன்படி, வாக்காளர் பட்டியல் சுருக்கமுறை திருத்த பணிகள் நடந்தது.
கடலுார் மாவட்டத்தில், திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலுார், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) என 9 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
மாவட்டத்தில் கடந்த டிச., 19ம் தேதி வெளியான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் ஆண்கள் 9,60,645, பெண்கள் 9,85,832, மூன்றாம் பாலித்தனவர் 282 என, மொத்தம் 19,46,759 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.
மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் தொடர்பாக சிறப்பு முகாம் நடந்தது.
இதில், மொத்தம் 51,342 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு பணிகள் நடந்தது. தகுதியான விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு வாக்காளர் பட்டியல் இன்று (23ம் தேதி) வெளியிடப்படு கிறது.
மாவட்டத்தில் ஏற்கனவே, 2,333 ஓட்டுச்சாவடி மையங்கள் இருந்தது. வாக்காளர்கள் எண்ணிக்கைக்கேற்ப ஓட்டுச்சாவடி மையங்களை அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, 1,200 ஓட்டு களுக்கு மேல் உள்ள ஓட்டுச்சாவடி மையங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டது. இதன் மூலமாக மாவட்டத்தில் ஓட்டுச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 2,590 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில், 69 ஓட்டுச்சாவடி மையங்கள் பதற்றமானவை என்றும், 13 ஓட்டுச்சாவடி மையங்கள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன.
இதற்கிடையே, ஓட்டு ச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம், கழிவறை, கட்டடத்தின் உறுதி தன்மை, மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து கிராம நிர்வா க அலுவலர்கள் ஆய்வு பணி மேற்கொண்டனர்.
இவர்கள் அளித்த அறிக்கையின் பேரில், இரண்டாம் கட்டமாக மாவட்டம் முழுவதும் ஓட்டுச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்ய திட்டக்குடி தொகுதியில் 27 மண்டல அலுவலர்கள், விருத்தாசலம் 32, நெய்வேலி 21, பண்ருட்டி 26, கடலுார் 29, குறிஞ்சிப்பாடி 29, புவனகிரி 31, சிதம்பரம் 31, காட்டுமன்னார்கோவில் 29 என மொத்தம் 255 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த தொகுதியில் கடந்த 20ம் தேதி முதல், ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி கூறுகையில், 'மாவட்டத்தில் உள்ள ஓட்டுச்சாவடி மையங் களில் அடிப்படை வசதிகள் குறித்து மண்டல அலுவலர்கள் ஆய்வு வருகின்றனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையின்படி, குறைகள் இருப்பின், துறை சார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பி அடிப்படை வசதிகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
